பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

35


நிறைவு செய்துகொண்டு முழு நூலுக்கும் விழுமிய விரிவுரை எழுதி முடித்தார். ஒவ்வொரு பாடலுக்கு முன்னும் பாடினோர், பாடப்பட்டோர் வரலாறு பற்றிய அரிய ஆராய்ச்சிக் குறிப்பைச் சேர்த்துப் பதிப்பித்து இரு பகுதிகளாக வெளியிடுவித்தார்.

அதனை அடுத்து வெளியிட்ட உரைநூல் மணிமேகலை. பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் முன்னரே மணிமேகலையின் முற்பகுதிக்கு உரையெழுதி வைத்திருந்தார். அந்நூலின் பிற்பகுதி புத்த சமயத் தத்துவங்களும், வேறு பல சமயங்களின் மாறுபடும் கோட்பாடுகளும், அளவை நூல் நுட்பங்களும் அடங்கியதாக இருத்தலின் அதற்குப் பொருள் கண்டு தெளிவது எத்தகையோர்க்கும் எளிதாக இல்லை. எனவே, அதனை முடிக்க யாரும் முன்வரவில்லை. செயற்கரிய செய்யும் சீரியராகிய பிள்ளையவர்கள் அப்பகுதிக்கு உரைகண்டு முடிக்க உறுதி கொண்டார். புத்த சமய நூல்களையும், பிற சமய நூல்களையும் முயன்று பெற்று முறையாக ஆய்ந்தார். அச்சமயங்கள் பற்றிய வடமொழி நூல்களை அம்மொழி வல்லுநரின்துணை கொண்டு படித்தறிந்தார். அளவை நூற்செய்திகளை ஐயமற ஆய்ந்து தெளிந்தார். பின்னர் அப்பகுதிக்குத் தெளிவான விளக்கவுரை எழுதி முடித்து அவ்வுரை நூலை வெளியிடச் செய்தார். அவ்வுரையின் உதவியால் இன்று யாவரும் மணிமேகலை நூல் முழுவதையும் படித்துப் பயன்பெறுவது எளிதாகியுள்ளது. மணிமேகலை உரைக்குப் பின்னர் அவர் நாட்டம் நற்றிணையின்பால் சென்றது. பல்லாண்டுகட்கு முன் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தம் புலமையே துணையாக, அவர் காலத்தில் கிடைத்த அருகிய ஆதாரங்களைக் கொண்டு நற்றிணைக்குச் சிற்றுரையொன்று எழுதி வெளியிட்டிருந்தார். பிள்ளையவர்கள் தம் மாணவர்கட்கு நற்றிணைப் பாடம் நடத்தியபொழுது அவ்வுரையின் குறைபாடுகளைக் கண்டு, அந்நூல் முழுவதையும் நன்கு ஆராய்ந்து அரிய குறிப்பு எடுத்திருந்தார். அக்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு நூல் முழுவதற்கும் விளக்கமான விரிவுரை எழுதி முடித்தார். அண்மையில் அஃது இருபகுதிகளாக வெளியிடப்பட்டது. பிள்ளையவர்களின் முன்னைய நூலுரைகள் அனைத்திலும் இது மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது பிள்ளையவர்கள் மாணவர்கட்குப் பாடம் சொல்லும் பொழுது ஒவ்வொரு நூலுக்கும்