பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/467

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்பையர்கோன் நாராயணன்

நோக்கி, நீவிர் மேன்மக்களோடு இனிது வீற்றிருக்க விரும்புவீர்களாயின், சிராமலைச் சிவனேக் “காலால் வலம் செய்து கையால் தொழுது கண்ணாரக் கண்டு பாடிப் பணிமின்கள்”[1] என வற்புறுத்துகின்றார்.

உயிரும் உடம்புமாகிய இரண்டையும் வேறுபடுத்தி நோக்கி, அவற்றுள் உடம்பின் நிலையாமை யுணர்ந்து, முடிவில் உயிர்கள் எய்த இருக்கும் நரகத்துக்கும் துறக்கத்துக்கும் காரணம் பழியும் புகழும் என்பதைக் கண்டவிடத்து, இருவகைப் பற்றும் அறும்;[2] மனைவி மக்கள் சுற்றம் முதலாயினருடன் உளதாகிய தொடர்பும் நீங்கும். இவ்வாற்றால் வேம்பையர்கோன் துறவுள்ளம் கொண்ட போது, முன்னை யடியார்களாகிய பெரியோர்கள் சென்ற அன்புநெறியாகிய “பழநெறி” யைச் சிராமலைப் பரன்காட்டியருளத் தாம், “அவனைப் பரவக் கற்றேன்; முழுநெறி யாகிலும் செல்லேன் இனிச் செல்வர் முன் கடைக்கே”[3] என்று தாம் அடியராகிய வரலாற்றையும் உரைக்கின்றார். இத்தகைய அறங்களைக் கேட்டுச் சிவன்பால் அன்பு செய்து பற்றற் றொழுகுபவரை உலகறிய அடிமை கொண்டு துறக்க இன்பமும் வீடுபேறும் எய்து விப்பன் சிராமலைச் சிவன் என்பாராய்,

“கள்ளும் முருகும் தருமலரால் மீக் கசிந்திறைஞ்சி
உள்ளும் புறமும் ஒருக்கவல் லார்கட் குலகறியக்
கொள்ளும் அடிமை; கொடுக்கும் துறக்கம்; பிறப்பறுக்கும்; தெள்ளும் அருவிச் சிராமலை மேய, சிவக்கொழுந்தே”[4]

என உரைக்கின்றார். இச் சிவனைப் பேணாது கழியும் சிலரைக் கண்டு மனம் வருந்தி,

“நெஞ்சம் துணையுண்டு நீர்நிலத் துண்டு நிழலுமுண்டு
தஞ்சப் பெருக்குள தால்நம் சிராமலைச் சாரல் உண்டு
துஞ்சும் துணையும் சிவனைத் தொழுது துறக்கம்எய்தார்
பஞ்சம் நலியப் பலிதிரி வார்சில பாவியரே”[5]


  1. 1.சிரா. ய. 39.
  2. 2. சிரா.ய. 49.
  3. 3. ௸ 34.
  4. 4. ௸ 47.
  5. 5. ௸ 42.