பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை

இதன்கண் அமைந்துள்ள நூற்பாக்கள் - 12 அதில் உள்ள அடிகள் - 40, மொத்தச் சொற்கள்-216: மொத்த எழுத்துக்கள்-624. இப் பன்னிரண்டு நூற்பாப் பொருளை ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் ஆராய்ந்து கூறுதற்கு ஏதுவாக 39 அதிகரணங்களும் 81 வெண்பாக்களும் உள்ளன.

இவ் அரிய நூலுக்குப் பாட்டும் உரையுமாகிய வடிவில், சான்றோர் உரைகண்டுள்ளனர். பாட்டில், முதலுரை கண்டவர், திருத்துறையூர் அருணந்தி சிவாசாரியார். அதற்குச் 'சிவஞான சித்தியார்' என்று பெயர். அதற்குப்பின் கொற்றவன்குடி உமாபதிசிவாசாரியார், 'சிவப்பிரகாசம்' என்ற பெயரில், எளிய முறையில் பாட்டுவடிவில் உரைகண்டுரைத்தார். இவ்வாறே, வடமொழிவல்ல சான்றோர் ஒருவர். இச் சிவஞான போதத்தை வடமொழியில் மிகவும் எளிய நடையில் பன்னிரு சுலோகங்களாக மொழிபெயர்த்துத் தமிழ் அறியாத வடபுல வாழ்நர்க்கு அறிவுறுத்தினார். அவர்க்குப்பின் சிவாக்கிரயோகிகள் என்பார், அவ் வடமொழிச் சிவஞான போதத்துக்கு வடமொழியிலேயே சிற்றுரையும் பேருரையுமாக உரையொன்று கண்டார்.

நம் நாட்டில் ஆங்கில மொழி முதலிடம் பெற்றபோது, ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை என்பார், இச்சிவஞான போதப் பொருளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். பிறகு, டாக்டர் பென்னத் (Dr.Bennet)முதலிய ஆங்கிலநாட்டார், ஆங்கிலத்திலும்; ஷாமாஸ் (Schomorus)என்ற ஜெர்மானியர் ஜெர்மனியிலும் எழுதினர்.

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த, முனிவர் பெருமக்களில் ஒருவராய் விளங்கியவரும், 'வடமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் நிலைகண்டுணர்ந்தவர்' என்று போற்றப் படுபவருமான மாதவச் சிவஞான சுவாமிகள், 'சிவஞான மாபாடியம்' என்ற பெயரால் பேருரையும் சிற்றுரையுமாக இரண்டினை எழுதினார்.

அவரது சிற்றுரை நூலே உரைவேந்தரால் பதிப்பிக்கப் பெற்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் 1953இல், வெளியிடப் பெற்றது.

இப்பதிப்பின் சிறப்புக்கள் பல. அவற்றுள் சில, இவண் குறிக்கத் தகும்:

1. மாணவர்கட்கும் ஆராய்ச்சியாளர்கட்கும்
பயன்படும் முறையில், உரையில் காணப்படும்
இலக்கணக் குறிப்புக்களும், அரும் பொருள்களும்
அடிக்குறிப்பில் விளக்கப்படுகின்றன;