கொண்டது. பிற பகுதிகளிலும் இத்தகைய சொற்கள் வழக்கில் உள்ளன. நெல்லையில் 'அக்குத் தொக்கு இல்லை' என்றால் முகவையில் 'பிக்குப்பிடுங்கல் இல்லை' என்பார்கள். நெல்லையில் அட்டமணியம் என்றால் முகவையில் மொட்டையதிகாரம் என்பார்கள். உசுப்பு என்பது எழுப்பு என்னும் பொருளில் இரண்டு பகுதிகளிலும் புழக்கத்தில் உள்ளது. அது உயிர்ப்பு என்பதன் மரூஉவாகலாம். உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு என்ற குறட்கருத்தின் அடிப்படையில் உருவான சொல்லாயிருக்கலாம். "மிராட்டிப் பய" என்னும் வசைச் சொல்லுக்கு ஈடாக 'கொங்கணப்பய' என்று திட்டுவது குறிப்பிடப்படுகிறது. "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா - என்ற வரியையும் முகவைப் பகுதியில் 'கொங்காப்பயல்’ என்று இன்றுவரை சொல்வதையும் ஒப்பிட்டுச் சுவைக்கலாம். 'காலம் இப்போது எவ்வளவோ மாறிவிட்டது, ஆனாலும் வசவுகள் அப்படியேதான் இருக்கின்றன' என்று ஆச்சரியப்படுகிறார் கி.ரா.
சிலசமயம் ஒரு பொருளைச் சொன்னால் மட்டும் முழுமை பெற்றதாகக் கருதாவிடத்து, அது இன்ன பொருள் அல்ல என்பதையும் இந்த அகராதி தெளிவுபடுத்துகிறது. அண்டங்காக்கையின் நிறத்தைக் கருப்பு என்று சொல்லி விட்டுவிடலாம. இன்னும் விளக்கிச் சொல்ல வேண்டுமானால் நனைந்த பனை போன்றது, வெள்ளை சிறிதும் கலவாக் கருப்பு அதன் நிறம் எனலாம் அதுபோல "பத்தடி பத்தடியா" என்பதற்கு "அடுத்தடுத்து" எனப் பொருள் சொல்வதோடு "பத்தடி என்பது பத்து அடிகளைக் குறிப்பது அல்ல" என்று பொருள் சொல்லும் Negative approach பாராட்டுக்குரியது. இந்த எதிர்மறை அணுகல் ஆழ்ந்த பொருள்காண உதவும்.
59