பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

சைவ இலக்கிய வரலாறு

கேளார் முதலியோர்க்கும் துறவிகட்கும் உணவுதரும் அறச்சாலைகளாக இருந்தன. கற்றுவல்ல புலவர்கள் தங்குதற்கும் அக்காலத்தே மடங்கள் இடமாக இருந்துள்ளன. முதல் தந்திவன்மன் காலத்தில், காஞ்சித் திருமேற்றளி யில் முத்தரையனொருவன் திருமேற்றளிப் பெருமானுக்கும், அத்தளியைச் சார்ந்திருந்த மடத்துக்கும் நிவந்தம் விட்டுள்ளான். மடங்கள் கற்றோர் இருத்தற்கும் இடமாதலின், திருநாவுக்கரசர் திருமேற்றளித் திருப்பதியத்தில், “கல்வியைக் கரையிலாதகாஞ்சிமாநகர்” என்றது. இத்திருமடத்திலிருந்த கற்றோரைக் குறித்த குறிப்பாகலாமென அறிஞர் கருதுகின்றனர். இது புதிது தோன்றியதாக இல்லாமையால், முதன் மகேந்திரவன்மன் காலத் தேயே இத்தகைய மடங்கள் தென்னாட்டில் தோன்றியிருக்கக் கூடுமெனவும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.

நிருபதுங்கவன் மனுடைய இருபத்தைந்தாமாண்டுக் கல்வெட்டொன்றில் காவிரிப்பாக்கத்து வரதராசப் பெருமாள் கோயிலுக்கு ஏற்படுத்தப்பட்டதொரு நிவந்தம், அவ்வூர், “மடத்துச் சத்தப் பெருமக்கள்” கண்காணிப்பிலிருக்க வேண்டுமெனக் கூறுகிறது. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழர்கள் காலத்திலும் இந்த மடம். கோயிற் பணிகளைக் கண்காணிக்கும் பொறுப்பேற்றிருந்ததெனப் பிற்காலக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. சத்தம் என்ற சொல்லுக்கு வடநூன் முறைப்படி நூலென்பது பொருள்; ஆகவே சத்தப் பெருமக்களாவார் வடமொழி வல்ல பெருமக்களென்பது தெளிவாம். ஆகவே, வடமொழி வல்லார் தலைமையில் நிலவிய மடங்கள் பல பல்லவர் காலத்தே இருந்தமையும், அவற்றின் வாயிலாக வடமொழி வளம் பெற்றமையும் இனிது உணரலாம்.

விசயகம்பவன்மன் காலத்தில் நிரஞ்சனகுரவரென்பவர்க்குத் திருவொற்றியூரில் ஒரு மடம் இருந்தது. அக்குரவர் நிரஞ்சனேஸ்வரம் என்றொரு கோயிலைக் கட்டியதாகவும், அதற்கு அவரே நிலங்கள் விட்டதாகவும் திருவொற்றியூர்க் கல்வெட்டொன்று கூறுகிறது. இரட்ட வேந்தனான மூன்றாம் கிருஷ்ணனுடைய இருபதாமாண்டுக்