பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாக்குதல்களின் பின்னும் கடவுள் பிழைத்திருக்கிறாரே! மேலும் மேலும் பக்தர்கள் கடவுளே நம்புகிறார்களே! இது ஏன் என்று இந்திய நாத்திகர்கள் சிந்திக்கவில்லை. ஒரு மாயைத்தோற்றம், மக்கள் மனத்தை இவ்வளவு வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன்?

கடவுள் என்ற கருத்தின் ஊற்றுக்கண் வேறொரிடத்தில் இருக்கிறது. இவ்வூற்றுக் கண்ணே நமது பண்டைய நாத்திகர்கள் அறிந்து கொள்ளவில்லை. மார்க்ஸ்தான் கடவுள் என்ற கருத்தும், வேறு எல்லாக் கருத்துக்களும் எவ்வாறு தோன்றின என்று விளக்கினார்.

ஃபயர்பாக் என்ற தத்துவவாதியின் பொருள்முதல் வாதம், ஹெகல் என்ற ஆன்மீகவாதியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பொலியாக ஒலித்தது. ஃபயர்பாக்கின் பொருள்முதல்வாத உள்ளடக்கத்தை மார்க்ஸ் பெரிதும் போற்றினார். ஆனால் பிரபஞ்சத்தின் வளர்ச்சியை பொருள்முதல்வாத அடிப்படையில் அவர் விளக்கவில்லை. பொருள் முதல்வாத அடிப்படையில் ஃபயர்பாக் உலக இருப்பையும், மனித மனத்தின் உள்ளடக்கத்தையும் ஆராய்ந்தார். மார்க்ஸ் ஃபயர்பாக்கை பின்வருமாறு விமர்சிக்கிறார்: “ஃபயர்பாக் மதத்தினால் அந்நியவயமாகி இவ்வுலகு இரண்டாக பொய்யான மத உலகாகவும், உண்மையானப் புற உலகாகவும் பிரிகிறது. அவருடைய தத்துவ முயற்சியெல்லாம் இப்பொய்யுலகை, உண்மையான உலகிற்குக் கொண்டு வருவதாகவே இருந்தது. இப்படிச் செய்யும்பொழுது மிக முக்கிய தத்துவ முயற்சியை அவர் ஒதுக்கிவிட்டார். உண்மை உலகின் முரண்பாடுகள் தீர்வு காணப்படாதபொழுது அவை விண்ணில் ஒரு தனி உலகை அமைத்துக் கொள்கின்றன. உலகிலுள்ள முரண்பாடுகள் தீர்வு பெறாதவரை, அவற்றில் இருந்து தோன்றி விண்ணில் இருப்பதாகக் கருதப்படும் மாயைத் தோற்றங்கள் கலையாது. உலகக் குடும்பமே தெய்வக் குடும்பத்தின் அடிப்படை என்பதைக் கண்டுகொண்டால் இவ்வுலக வாழ்க்கை முரண்

33