பக்கம்:ஆப்பிள் பசி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“மாமி!” என்று பரிச்சயமான குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது நிலவு போல பாப்பா நின்று கொண்டிருந்தாள். நகை ஏதும் அணியாமல், பளிச்சென்ற மேனி, மூன்றாவது அழகுக் கண் திறந்தது போல் நெற்றியில் குங்குமப் பொட்டு.

“வாம்மா! வா! ஏறிக்கோ. இந்தக் கூட்டத்திலே நான் வந்திருப்பது உனக்கு எப்படித் தெரிஞ்சது?” என்று கேட்டாள் மாமி.

“பீட்டன் வண்டியைப் பார்த்தேன். நீங்க வந்திருப்பீங்கன்னு நினைச்சேன்!” என்றாள் பாப்பா.

“நீ குடம் எடுக்கப் போகலையா?”

“ஆசைதான் மாமி! ஆனா அதுக்கு எனக்கு அருகதை உண்டோ இல்லையோன்னு சந்தேகமாயிருந்தது. அதனால போகலே” என்று குரலில் சிறிதே வருத்தம் தொனிக்கக் கூறினாள்.

“அதுக்கென்ன, பாப்பா! நீயும் குடம் எடுத்தா யார் வேண்டாங்கப்போறா?” என்றாள் மாமி.

“எனக்கு எதிலுமே புத்தி போகலை மாமி! அவர் வந்திருக்கார் பார்த்தேளா?” என்றாள்.

“யாரு, சாமண்ணாவா?”

“ஆமாம்! அவர் மட்டுமில்லை. எல்லா நாடகக்காரர்களும் வந்திருக்காங்க. சிங்காரப் பொட்டு செல்லப்பா கூட வந்திருக்கார்.”

“உடம்பு சரியில்லாமல் இருந்தாரே, அவர் எப்படி வந்தார்?”

“ஆமாம்! கொஞ்ச நாளாகவே படுத்த படுக்கையா இருந்தாராம். முருகன் அருளாலே இப்ப பூரணமா குணமாயிட்டுதாம்.”

“நாடகங்களில் கதாநாயகன் வேஷம் போடுவார். ஜில்பாக் குடுமி வைத்துக் கதுப்புக் கன்னங்களில் குழி விழச் சிரிச்சார்னா ஊரே மயங்கிப் போகுமே!”

“இப்ப சொந்தக் கம்பெனி ஆரம்பிச்சு மறுபடியும் நாடகம் நடத்தப் போறாராம். அதுக்காகத்தான் இங்கே வந்திருக்கார்னு அப்பா சொன்னார். பல பெரிய மனுஷாளைச் சந்திக்கிறதுக்கு இது ஏத்த இடமாச்சே! எல்லாரும் இங்கே வந்திருக்கா பாருங்கோ!”

“சந்திச்சு என்ன செய்யப் போறார்?”

“எல்லாப்பெரிய மனுஷாகிட்டேயும் பணம் வசூல் பண்ணிக்கிட்டு இருக்காராம்!”

“அடி, சக்கை! அப்படின்னா சீக்கிரமே புதுக் கம்பெனி ஊர்லே வந்துடும்னு சொல்லு” என்று சந்தோஷப்பட்டாள் கோமளம்.

“வரலாம் என்று தலைகுனிந்து கூறினாள் பாப்பா.

“ஏன் பாப்பா! உனக்கு இதில் ஏதாவது வருத்தமா?”

73

73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/73&oldid=1029588" இலிருந்து மீள்விக்கப்பட்டது