பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் கவிஞர் கம்பதாசன் ஒர் எரிநட்சத்திரம் 1962ஆம் ஆண்டு சனவரித் திங்கள். பொங்கல் நாள். பாவேந்தர் பாரதிதாசனைக் காண அவர் குடியிருந்த சென்னை இராமன் தெரு இல்லம் சென்றேன். வீட்டு முற்றத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் அழுக்குச் சட்டை, கலைந்த சிகை, மெலிந்த உடலோடு சுருண்டு படுத்திருந்தார். வீட்டில் பாவேந்தரின் துணைவியார் பழனியம்மாள் இருந்தார். 'யார் இந்தப் பெரியவர்?’ என்று கேட்டேன். ‘‘தெரியலியா? கம்பதாசந்தா! குடிச்சுப்பிட்டா இங்கதா வந்து படுத்துக்குவா. இது இவனுக்குப் பாதுகாப்பான இடம் இல்லியா?” என்று பதிலிறுத்தார். நான் திகைத்துப் போனேன். தமிழ்நாட்டில் மதுவிலக்குச் சட்டம் அமுலில் இருந்த நேரம் அது. ஐந்தடி எட்டங்குல நெடிய உருவம்; பொன்மேனி, கதர்ச்சட்டை தோளில் பட்டுச் சால்வை; பெண்மை கலந்த கம்பீர ஆண்மை. இது கம்பதாசனின் பொற்காலத் தோற்றம். மங்கையர்க்கரசி படத்தில் கவிஞர் வித்தியாபதி வேடத்தில் தோன்றிய கம்பதாசனைப் பலரும் பார்த்திருக்கலாம். இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்களுள் சுரதாவும் கம்பதாசனும் மிக்க அழகானவர்கள். புதுவை வில்லியனூரைச் சேர்ந்த இவருக்குப் பெற்றோர் சூட்டிய நாமகரணம் அப்பாவு நாடகத்தில் நடித்த காலத்தில் இவர் சூட்டிக் கொண்ட பெயர் சி.எஸ். ராஜப்பா. திரை உலகில் நுழைந்த பிறகு கம்பதாசன். புகழ்பெற்ற சாகித்ய கர்த்தாவும், பக்திப் பாடகருமான மதுரை மாரியப்ப சுவாமிகள் கம்பதாசனு ைய மாமன்.