உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோடையும் வசந்தமும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்தொரு காலம்... நாடெங்கும் தெருவெங்கும் மேடையெங்கும் கவியரங்கங்களின் கொடி பறந்தகாலம். மீராவின் நயமிகுந்த பாட்டுக்கொடி மற்றவர்கள் எட்டித் தொட மாட்டாத தனி உயரத்தில், வண்ணத்தில், வடிவத்தில் பட்டொளி வீசிப்பறந்தகாலம். கிரேக்க அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்பை

'சிந்துநதிப் பெண்ணின் இடை சிறுத்த இடம் பார்த்து

வந்து வென்றான், என்பது போன்ற அரங்க வாசகங்கள் காற்றோடு போகாமல் 'மூன்றும் ஆறுமாக கேட்ட செவிகளில் ரீங்கரித்திருந்த சிறப்புக் காலம்.

பின்னொரு காலம்.... காதலர் கீதையாய், வாசிப்பவர் நெஞ்சுகளிலும் பிரிவின் இம்சைகளை விதைத்து விட்டு, நூற்றுக்கணக்கில் காதல்பித்துக் கவிஞர்களை வளர்த்து விட்ட கனவுகள் + கற்பனைகள் = காகிதங்களின் பொற் காலம். யாப்புக் கட்டுகளிலிருந்து சுத்தமாக விடுபட்டு, புத்தம் புதுக் கவிஞராக மீரா முடிசூட்டிக் கொண்டகாலம்.

பிறகொரு காலம்.... சமூக நச்சுக் கோடுகளுக்கு மூல ஆதாரங்களாக முகம் மறைத்து வாழும் கீழான கயவர்களைக் குத்திக் கிழித்துத் தோலுரித்துக் காட்டும் ஊசிகளின் உலாக்காலம்.

'உனக்கும் எனக்கும் ஒரே ஊர் வாசுதேவ நல்லூர்...' என்று நவயுகக் காதலைச் சித்தரித்தது போன்ற சமுதாய நையாண்டிப் புதுக்கவிதைகளின் அலை முழங்கிய காலம்.

இன்றொரு காலம்... அந்த நாளுக்கும் இந்த நாளுக்கும் சிந்தனைநூல் நெசவு செய்வது போல, அகமும் புறமுமாய்ப் பின்னிப் பிணைந்த உணர்வுகள் 'கோடையும் வசந்தமுமாய்க் குலவுகிற காலம். கால இடைவெளிகள் 15