பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

அறத்தின் குரல்

விழிகளுடன் விராட்னை அணுகி எதிர்த்து அஞ்சாமல் போர் புரிந்தான். எப்படியோ சாதுரியமாக விராடராசனை வெறுங்கையனாக்கிச் சிறைப்பிடித்துத் தன்னுடைய தேர்க்காலிலும் கட்டிவிட்டான். கங்க முனிவராக இருந்த தருமன் பலாயன்னை (வீமனை) அழைத்துத் திரிகர்த்தனுக்குப் பாடம் கற்பித்து அவனைச் சிறைபிடித்துக் கட்டுமாறு ஏவினார். வீமன் வெகுண்டெழுந்தான். கதாயுதத்தை ஓங்கிக் கொண்டு வரும் வீமனைக் கண்டதும் திரிகர்த்தன் நடுநடுங்கிப் போனான். ஆயினும் மன நடுக்கத்தைச் சமாளித்துக் கொண்டு எதிர்த்தான். வீமனுக்கும் திரிகர்த்தனுக்கும் கடும் போர் நிகழ்ந்தது. இறுதியில் வீமன் விராடமன்னனை அவிழ்த்து விட்டு அவனுக்கு முன்னால் திரிகர்த்தனைக் கொண்டுபோய் நிறுத்தினான். விராடனை எந்தக்கைகள் இழுத்துக் கட்டினவோ, அதே கைகளைத்தான் இழுத்துக் கட்டினான் வீமன். தன்னை விடுதலை செய்ததோடன்றித் தன் எதிரியைச் சிறைப்பிடித்ததற்காகவும் வீமனுக்கு நன்றி செலுத்தினான் விராட மன்னன்.

“பிழை புரிந்தோரையும் மன்னிப்பது பெரியோர் இயல்பு. நாம் இந்தத் திரிகர்த்தனை விடுதலை செய்வதே பெருந்தன்மையான செயல்” என்று கூறினார் கங்க முனிவர். விராடனும் அதற்கு இணங்கினான். உடனே வீமன் பசுத்திருடனாகிய திரிகர்த்தனை அவிழ்த்து விட்டான் அவன் குனிந்த தலையோடு சென்றான். தனக்கு ஏற்பட்ட அவமானங்களால் அவன் நெஞ்சம் கொதித்தது. திரும்பி அத்தினாபுரிக்குச் செல்லாமல் ஓரிடத்தில் போய்த் தங்கிக் கொண்டு தன் தோல்வியையும் பிற நிகழ்ச்சிகளையும் துரியோதனனுக்குக் கூறியனுப்பினான்.

“நகரின் தெற்கு எல்லையிலுள்ள பசுக்களைக் கவரப்போன படைக்குத்தான் இந்தக் கதி நேர்ந்து விட்டது. நாம் வடக்கு எல்லையில் போய்ப் பெரும்படையோடு மீண்டும் பசுக்களைக் கவர்ந்து தாக்குவோம்” என்று துரியோதனன் படை திரட்டிக் கொண்டு வடக்கெல்லைக்கு