பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

அறத்தின் குரல்

அங்கிருந்தோர்க்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. கூடியிருந்தோர் கர்ணனின் நேர்மையை வியந்தனர். ஆனால் கர்ணனுக்கு நேர்மாறான குணம் படைத்த சகுனி, துரியோதனனுக்கு முன்னால் தன் சூழ்ச்சி வலையைச் சாதுரியமாக விரிக்கத் தொடங்கினான். நல்லவைகளை விடத் தீயவைகளைச் சீக்கிரமே புரிந்து கொண்டு செய்ய முற்படுகின்ற இதயப் பாங்குள்ள துரியோதனன் சகுனியின் சூழ்ச்சி வலையில் மெல்ல மெல்லத் தன்னையறியாமலே விழுந்து கொண்டிருந்தான். கர்ணன் ‘சூழ்ச்சி கூடாது’ -என்று சொல்லி முடித்த மறுவிநாடியே சகுனி பேசலானான்:

“இப்போது பேசிய கர்ணனானாலும் சரி, வானுலக வீரரானாலும் சரி! நேரிய முறையில் போர் செய்து பாண்டவர்களை வெற்றி கொள்வது என்பது நடக்க முடியாத காரியம். இன்று மட்டும் அன்று. இன்னும் ஏழேழுப் பிறவிகள் முயன்றாலும் நடக்க முடியாத காரியம். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். திரெளபதிக்கு சுயம்வரம் நடந்தபோது அர்ச்சுனனோடு நாம் போர். செய்தோம். அவன் ஒருவன் நாமோ பலர். ஆனாலும், வெற்றி கொண்டவன் அவன்தான். அர்ச்சுனன் ஒருவனுடைய ஆற்றலுக்கு முன்னால் நாமெல்லோரும் தோல்வியடைந்தோம் என்றால் பாண்டவர்கள் எல்லோரையும் வெல்வது எப்படி? எனவே சூழ்ச்சி ஒன்று தான் பாண்டவர்களை நாம் சுலபமாக வெல்வதற்கு வழி, வேறெந்த வழியினாலும் இயலாது!”

“ஆம் ஆம் மாமன் சொல்வது தான் சரி. சூழ்ச்சி செய்து தான் பாண்டவர்களைத் தொலைக்க வேண்டும். வேறு வழியில்லை” -என்று துச்சாதனனும் இப்போது மாமனை ஆதரித்துப் பேசினான்.

தீமையை விரைவில் புரிந்து கொண்டு அதன் வழி நடக்கின்ற துரியோதனன் மனமகிழ்ச்சியோட சகுனியைத் தன் அரியணைக்கு அருகில் அழைத்தான். தன் யோசனைக்கு