பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6. செங்கோட்டை

ஐரோப்பாக் கண்டத்தில் வரலாற்றுச் சின்னங்களுக்குப் புகழ்பெற்ற பெருநகரம் உரோமாபுரியாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் வரலாற்றுச் சின்னங்களுக்குப் புகழ்பெற்ற இடம் டில்லி மாநகரம்.

இந்நகரம் எத்தனையோ அரச பரம்பரையைக் கண்டுள்ளது. இந்நகரில் மணி முடி தரித்த மன்னர் பலர் அரியணை ஏறி அரசு புரிந்துள்ளனர். மாவீரர் பலர் தங்கள் குருதிச் சேற்றை இந்நகரில் கொட்டி வெற்றி விழாக் கொண்டாடி யிருக்கின்றனர்.

வெனிசு, யவனம், பாரசீகம், துருக்கி முதலிய நாடுகளிலிருந்து கட்டடக் கலைஞர்களும் சிற்பிகளும் இங்கு வந்து கூடி. இந்நகரைத் தம் கைவண்ணத்தாலும், கலை வண்ணத்தாலும் அழகுபடுத்தி இருக்கின்றனர். தான்சேன் போன்ற மாபெரும் இசைக் கலைஞர்கள், தம் இசை வெள்ளத்தில் இந்நகரை ஆழ்த்தி இன்பம் கண்டிருக்கின்றனர். இராசபுதனத்து எழில் மங்கையரும், அரபு நாட்டு அழகியரும், பாரசீகப் பாவையரும் இப்பொன்னகரின் பூங்காக்களில் அடி பெயர்த்து நடந்து இதை விண்ணகராக்கி யிருக்கின்றனர். வரலாற்றாசிரியர்களின் பொன்னேட்டைப் புரட்டிப்பார்த்தால், புகழ் மிக்க இத்தலை நகரம் ஆயிரமாயிரம் கதைகள் கூறும்.

டில்லி நகரில் அரசுக்கட்டில் ஏறிய அரசப் பெருங்குடியினரில் மொகலாயர் குறிப்பிடத்தக்கவர்கள் என்பது சொல்லாமல் விளங்கும். ஷாஜகான்