உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/2 10 யூகிக்கு விலாவித்தது

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

2 10 யூகிக்கு விலாவித்தது

விலாவித்தது

[தொகு]

அறம்புரி யாட்டி யமைச்சனி னீங்கி
மறம்புரி தானை மன்னவ னிருந்த
தயங்கிதழ்த் தாமரைத் தண்பணை தழீஇய
சயந்தியம் பெரும்பதி யியைந்தகம் புக்குப்
பொன்வரை யன்ன பொருவிலாகத்து 5
மன்ன குமரனை மரபுளிக் குறுகித்
தாய்காண் கன்றிற் காவலன் விரும்பி
ஏற்ற செவ்வி மாற்றங் கூறிச்
சேடுபடப் புனைந்த சித்திரக் கம்மத்துப்
பீடங் காட்டலி னீடுபட விருந்து 10
மன்னவன் மகனே மாதரொடு போந்து
நின்னகர்ப் புகுந்த பின்னர்க் கண்டனென்
என்னா கியர்மற் றென்வயி னினியென
முகமற் கிளவி தகுவ கூறி
ஆடியல் யானை யவந்திய னகர்வயிற் 15
பாடி மாற்றமொடு பட்டதை யுரைத்தபின்
முனிமூ தாட்டியை முகனமர்ந்து நோக்கி
இனியவர் பெருங்கட மியல்பிற் றீர்த்த
யூகி நும்மொடு போந்தில னோவெனப்
போகிய புகழோற்குப் பொருக்கென வுரையான் 20
ஆங்கவன் கேட்ப வறிவி னாடிச்
சாங்கிய முதுமக டான்றெரிந் துரைக்கும்
ஒலியுஞ் சேனையுள் வலியோரை வணக்கி
நங்கைநைத் தழீஇநீ போந்த கங்குற்
பட்டதை யெல்லாம் பட்டாங் குணர்ந்து 25
மறுபிறப் புணர்ந்த மாந்தர் போல
உறுகுறைக் கரும முள்ளக மருங்கிற்
றானே யுணரி னல்லது புறப்பட்
டேனோ ரறியா வியற்கைத் தாகிக்
காரிய முடிவி னாரிருண் மறையா 30
அரும்பொறி வையத்துக் காந்தகத் தொடுங்கி
எம்மைக் கொண்டுவந் தேமஞ் சார்த்தி
வெம்மை வேட்டுவர் வியன்மலை வரைப்பிற்
கோற்றொழிற் கரும மாற்றுளி முடித்துச்
சிலபகல் கழிந்தபின் வருவனீர் சென்று 35
நலமிகு வேந்தனை நண்ணுமின் விரைந்தென்
றொழிந்தன னுதயண யூகி பின்னென
மொழிந்தன னடக்கி முகிழ்விரற் பணைத்தோள்
வாசவ தத்தையை வகையுளிக் காண்கெனத்
தேச மன்னன் றிறத்துளிக் கூறக் 40
கன்றுகாண் கறவையிற் சென்றவட் பொருந்தித்
தளிர்நடை யிளமையிற் றான்கொண் டோம்பிய
வளர்கொடி மருங்குல் வருந்தப் புல்லி
உவகைத் தண்டுளி யூழூழ் சிதறி
அமிர்துகடை கடலி னரவ மோவாது 45
தமர்தலை மணந்த தம்பெருங் கோயிற்
கண்ணீர் வெள்ளங் காலலைத் தொழுக
வட்டிகை வாக்கின் வனப்பொடு புணர்ந்த
பட்டச் சின்னுதற் பதினா றாயிரர்
நும்மோய் மார்களுந் தம்மின மகளிரும் 50
ஒருதுணை யாயமு முடைவுகொண் டொழியப்
பெருமகன் றானெனப் பெற்றியிற் பிழையான்
யாப்பமை காதலோ டாருயி ரன்ன
கோப்பெருந் தேவிக்கு நீப்பிட முணர்த்தித்
தந்நையுரை காட்ட வுய்ந்தது முதலா 55
இன்பக் கட்டுரை பைந்தொடி கேட்ப
முறைமையின் விரிப்ப முகத்தொளி புல்லென
நிறைமலர் நெடுங்க ணீஇர் நெகிழத்
தமர்வயி னினைஇய தன்மைய ளாகிப்
புகரில் கோலத்துப் புனையிழை புலம்பத் 60
தாழ்நகை யாகத்துத தண்சாந்து சிதைய
வீழ்தரு வெந்துளி விரலி னீக்கிச்
செவிலித் தவமக டேறக் காட்டி
அவலங் கோட லங்கண் ஞாலத்து
வெங்கண் வேந்தன் பைந்தொடிப் பாவாய் 65
மங்கல மகளிர்க்கு மரபன் றிதுவென
நீலப் பொய்கூப் பாசனைத் தாமரை
கதிர்வாய் திறந்து……
பகுவாய் கிண்கிணி பரட்டுமிசை யார்ப்பக்
கோடுவாய் சிலம்பிற் கொழுஞ்சிகைக் குன்றின் 70
பாடமை படுகால் பைய வேறி
நங்காய் காணுன் பெருமா னன்னகர்
உந்தத் திசையதென் றொன்றப் பிறவும்
உகப்பக் கூறி மிகப்பல வருட்டி
உலகியல் வழாஅ வுருமண் ணுவாவொடு 75
வலிகெழு நோன்றாள் வயந்தகற் குறுகி
நட்டோன் றுணிந்த கட்டழற் கருமம்
மந்தண மாக வந்தணி யுரைத்தலும்
நன்னெறி நூல்வழித் திண்ணறி வாளன்
வருந்தி நோற்ற வருந்தவம் போலப் 80
பிற்பய முடைமை தெற்றெனத் தெளிந்து
தெரிமதி யாட்டியைத் திட்பங் கொளீஇ
அருமதி யமைச்சனை யன்பிற் கெழீஇத்
தோழற் குணர்த்துஞ் சூழ்வினை தொடங்கிக்
கட்டளை யமைந்த கண்ணார் வனப்பினோர் 85
வட்டிகைப் பலகையுள் வாக்குவகை யமைத்து
வத்தவன் வடிவினோர் வண்ணப் பாவை
வித்தகஞ் சிறப்ப வேறுபட வெழுதி
நாற்க ணாக வமைத்துமற் றவற்றுள்
மேற்கண் மழுகிய வினையிற் றாகக் 90
கைத்தொழி லமைத்தபி னுய்த்தவட் குணர்த்தி
விருத்தி யமைத்த வினைமுடி பாவைக்
கருத்துமெய் தெரிதல் காவலன் கடனெனத்
தேவியொ டிருந்த செவ்விக் கோட்டியுள்
ஓவியப் பாவை யுய்த்தவள் காட்ட 95
நுண்ணுணர் மன்னன் றன்னொப் பாகிய
கண்ணுளர் நுட்பத்துக் கருத்து நோக்கி
இடம்படு ஞாலத் துடம்பொடு புணர்ந்த
இன்னியன் மாந்தர் திண்ணிய லுறுப்பினுள்
தாளே ப்ருங்கிளை தோளே துணைவி 100
பல்லே மக்கள் கண்ணே தோழர்
முடியே குரவ ரடியே யாளாம்
ஆக்கையி னாடி யங்ஙனங் காணின்
மேற்கட் குற்றத்து விதுப்பியல் வழாது
நூற்க ணுனித்த நுண்ணுணர் வெண்ணத்தின் 105
யூகி தன்வயி னுறுகண் வெந்தொழில்
ஆகிய துண்டென வையந் தேறி

யூகி இறந்தானாக நினைந்த உதயணனது வருத்தம்

[தொகு]

உதயணன் மாழாந் துயிர்வாழ் வொழிகெனச்
சிதர்பொறி யெந்திரம் போலச் சிதர்ந்து
தாரும் பூணு மார்பிடைத் துயல்வரச் 110
சோருங் கண்ணினன் றுளங்கிமெய் மறப்ப
இடியே றுண்ட நாகம் போலக்
கொடியேர் சாயற் கொழுங்கவின் வாடப்
பூவிருங் கூந்தல் புல்லென விரிய
வாசவ தத்தையும் வத்தவன் மார்பின் 115
மம்ம ரெய்திய மயக்க நோக்கி
விம்ம லெய்தி வியன்பெருங் கோயில்
அழுகை யாகுலங் கழுமிய பின்றை
அவல வுயிர்ப்பிணி யடியற வெறியும்
தவலருஞ் சாந்தந் தடியுற வப்பிச் 120
சீதச் செய்கையின் மாதுயர் விடுப்பத்
தீதில் பெருமகன் றெளிவுமுந் துறீஇக்
காதலிற் கவலைப் பாசந் தன்பத்

யூகி தனது சிறைத்துயரம் நீக்கியது முதலியவற்றைச் சொல்லி உதயணன் புலம்பல்

[தொகு]

தண்டா மரைக்கண் வெம்பனி வீழ
விண்டோய் கானத்து வேழ வேட்டத்துச் 125
சிறைகொளப் பட்டியான் செல்சார் வறுத்தபின்
மறைகொண் மாயமொடு துறைநகர் விழவினுள்
ஏதின் மன்னன் காதலி பயந்த
மாதரைத் தழீஇப் போதரப் புணர்த்துப்
போதுவ லென்றோய் பொய்த்தனை யோவெனக் 130
காதற் றோழனைக் காணாது கலங்கி
மாதாங்கு தடக்கை மன்னருண் மன்னவன்
நளிகதிர் கண்டில நாண்முதற் றோன்றி
ஒளியிடப் பெறாஅ வுலகம் போல
இருளகம் புதைப்ப மருளகத் தெய்தித் 135
தருமமுங் கருமமுந் தளரச் சாஅய்
ஆழி னல்லதை யரசியல் வழாமை
வாழ்த லாற்றேன் யானென மயங்கியும்

இளமைப் பருவத்தில் யூகி தன்பால் வைத்திருந்த அன்பின் மிகுதியைச் சொல்லி உதயணன் புலம்பல்

[தொகு]

நிழற்பொலி காவி னிரந்துட னாடிக்
குழற்சிகை யவிழக் குண்டுநீர் யமுனைக் 140
கணைக்கடு நீத்திடைப் புணைப்புறந் தழீஇ
விளையாட்டு விரும்பி யளையின வாகிய
இன்சுவை யடிசி லுண்பது மொரீஇ
மன்பெருங் கோயிலுள் வளர்ந்த காலை
வேக நம்பிக்கு விலக்குக வடிசிலென் 145
றாகுபொரு ளறிவி யரும்பொரு ளென்மகள்
யூகந்த ராய னுண்கென வுண்ணாய்
குடிப்பெருந் தேவி யடிக்கலம் பற்றி
அருளினுங் காயினு மொப்ப தல்லதை
பொருளஃ தன்று புரவலன் மாட்டென் 150
றென்செய் குற்ற நின்கட் டாங்கி
அன்பளி சிறப்பித் தின்பத மியற்றல்
இளமைக் காலத்து மியல்பா வுடையோய்
முதுமைக் காலத்து மதலையிற் றாங்கிப்
பின்போக் குரிய பெருந்தகை யாள 155
முன்போக்கு விரும்புதன் மூர்க்கா தியல்பெனக்
கேட்டோ ருருக மீட்டுமீட் டரற்றப்

உருமண்ணுவா உதயணனைத் தேற்றல்

[தொகு]

பூந்தார் மார்ப புலம்புகொண் டழீஇ
இருநில வரைப்பி னியற்கை யோராப்
பெருநிலங் காவல பேணா தவர்முன் 160
இனையை யாகுத லிறைமை யன்றாற்
கொடுங்காழ் சோரினுங் கூட மூன்றிய
நெடுங்காழ் போல நிலைமையின் வழாஅது
துன்பத்திற் றுளங்கா தின்பத்தின் மகிழா
தாற்றுளி நிற்ற லாடவர் கடனென 165
மாற்றம் பற்பல மரபிற் கூறி
யடநடு தரூடடங்கண் டபுத்த
அந்த ணாளரின் வெந்திறல் வீரன்
சொற்றுணைத் தோழன் றொழில்பா ராட்டி
நற்றுணை மாந்தர் முற்றுணை யாக 170
அரசிய லாக்கங் கூடு மாயினும்
பெருவிறற் றோழன் வருதலு முண்டெனத்
தானயர் பெருநெறித் தலைநின் றனனால்
வீணை வித்தகன் விலாவணை தொடர்ந்தென்.

2 10 யூகிக்கு விலாவித்தது முற்றிற்று.