உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/2 11 அவலம் தீர்ந்தது

விக்கிமூலம் இலிருந்து
(2 11 அவலம் தீர்ந்தது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  • பாடல் மூலம்

2 11 அவலந் தீர்ந்தது

அவலம்

[தொகு]

விலாவணை யொழியான் வீணைக் கைவினை
நிலாமணிக் கொடும்பூ ணெடுந்தகை நினைந்து
வைக றோறும் வான்மதி மெலிவிற்
பையுள் கொண்ட படிமை நோக்கி
அரும்பெற லமைச்சரொ டொருங்குடன் குழீஇக் 5
காவல னதிர்ந்த காலை மண்மிசைத்
தாவில் பல்லுயிர் தளர்ச்சி யெய்தலின்
எத்திறத் தாயினு மத்திற மகற்றுதல்
மந்திர மாந்தர் தந்திர மாதலின்
வத்தவர் கோமாற் கொத்த வுறுதொழில் 10
உத்தம மந்திரி யூகியிற் பின்னர்
அருமை சான்ற வாய்பொருட் கேள்வி
உருமண் ணுவாவிற் குறுகட னிதுவெனத்
தாழாத் தோழர் தன்மேல் வைத்தபின்
வீழாக் காதலொடும் விரும்புவன னாகிச் 15
செய்பொரு ளிதுவென வையந் தீர
மன்னுயிர் ஞாலக் கின்னுயி ரொக்கும்
இறைபடு துன்பங் குறைபட வெறியும்
மருந்தின் பிண்டந் தெரிந்தனிர் கேண்மின்

உதயணனது கவலையைத் தீர்த்தற்குரிய பரிகார வகைகள்

[தொகு]

தணப்பில் வேட்கை தலைத்தலை சிறப்ப 20
உணர்ப்புள் ளுருத்த வூட லமிர்தத்துப்
புணர்ப்புள் ளுறுத்த புரைபதம் பேணும்
காமக் காரிகைக் காதன் மகளிர்
தாம்பஃ புணர்முலைத் தலைப்பிணி யுறீஇ
யாமக் கோட்டத் தருஞ்சிறைக் கோடல் 25
வணங்கா மன்னரை வாழ்வுகெட முருக்கி
அணங்கரும் பெருந்திறை கொணர்ந்துமுன் னிடுதல்
பூமலர் பொதுளிய புனல்வரைச் சோலை
மாமலைச் சாரலொடு கானங் காட்டுதல்

புணை வகைகள்

[தொகு]

யானையுச் சுரியுளை யரிமா னேறும் 30
மானிற் பெடையும் வாள்வரி யுழுவையும்
புள்ளு மாக்களு முள்ளுறுத் தியன்ற
நொய்ம்மர நெடும்புணை கைம்முதற் ற.ழீஇக்
கூறா டாயமொடு குழூஉக்கொண் டீணடி
ஆறா டாயமொ டணிவிழ வமர்தல் 35
இன்ன தொன்றினு ளென்னதொன் றாயினும்
காமுறு கருமங் கால்வலை யாக
ஏமுற வொழியா வேயர் மன்னனை
உடுத்துவழி வந்த வுழுவ லன்பின்
வடுத்தீர் கைவினை வாசவ தத்தையொ 40
டொருப்படுத் தொழியா தோங்குமலை மருங்கிற்
கடிகமழ் கானங் காணக் காட்டிப்
படிவப் பள்ளியுட் பாவப் பெருமரம்
விரத மழுவின் வேரறத் துணிக்கும்
குறிக்கோ ளுறுதவ னுண்மை கூறி 45

……

உதயணனுடைய பிறப்பு வரலாறு முதலியன

[தொகு]

இன்றே யன்றியுந் தொன்றுவழி வந்த
குன்றாக் கற்பினெங் கோப்பெருங் கிழவோள்
நித்திலம் பொதிந்த விப்பி போலத்
திருவயிற் றகவயி னுருவொளி யறாஅ
நின்னைத் தாங்கிய நன்னா ளமயத்துக் 50
கண்ணிழன் ஞாறிய காமர் பள்ளியுள்
வெண்ணிலா முற்றத்து விரும்பி யசைதலின்
ஒள்ளொளி யரத்த மூனென நசைஇப்
பல்வலிப் பறவை பற்றுபு பரிந்து
விபுல மென்னும் வியன்பெருங் குன்றத் 55
தருவரை யருக ராய்நலங் கவினிய
ஆலங் கானத் தணியொடு பொலிந்த
ஞாலங் காவ னஞ்சென நீக்கிப்
பாய்பரி யிவுளி யேயர் பெருமகன்
தன்கட் கொற்ற மெல்லாந் தன்மகன் 60
வென்றித் தானை விக்கிரற் கருளி
மறுவி னெஞ்சமொடு மாதவந் தாங்கி
உறுபெருங் காட்சி யோங்கிய படிவத்
தறம்புரி தந்தை பள்ளிய தருகர்ப்
பறந்துசெல் சிம்புள் பையென வைத்தலும் 65
கயலேர் கண்ணி துயிலேற் றெழவே
உயிர்போ யுறாமையி னுறுபுட் போக
அச்ச வகையினு மந்தரச் செலவினும்
பொற்றொடி மாதர் பொறைநோய் கூர
எல்லாக் கோளு நல்வழி நோக்கத் 70
திருமணி விளக்கத் திசைநின் றழலப்
பெருமணிப் பாவையிற் பிறந்தனை கிடந்தோய்
திருமெய் தழீஇ யருமைத் தாக
நிகழ்ந்ததை யறியாள் கவன்றன ளிரங்க
ஆத்திரை போந்த வருந்தவன் கண்டுதன் 75
ஆத்த காதன்மக ளாவ தறிந்துசென்
றஞ்ச லோம்பென நெஞ்சகம் புகலப்
பள்ளிக் கொண்டுபுக் குள்ளழி வோம்பி
அதிரா ஞாலத் தரசுவீற் றிருந்த
கதையுரைக் கெல்லாங் காரண னாதலிற் 80
புதையிரு ளகற்றும் பொங்கொளி மண்டிலம்
உதய மிவர்தர வுதித்தோன் மற்றிவன்
உதயண னாகெனப் பெயர்முதற் கொளீஇப்
பரம விருடிகள் பல்லோர்க்குத் தலைவன்
தருமந் தாங்கிய தவாஅக் கொள்கைப் 85
பிரமசுந் தரனெனும் பெரும்பெயர் முனிவற்குப்
பழிப்பில் கற்பிற் பரமசுந் தரியெனும்
விழுத்தகு பத்தினி விரும்பிப் பெற்ற
புத்திரன் றன்னொடு வத்தவர் தோன்றலும்
இருவிரு மவ்வழி மருவிவிளை யாடிச் 90
செல்லா நின்ற சில்லென் காலை
வெஞ்சின வேழ வெகுளி நீக்கும்
மந்திர நாமம் வந்துநீர் கன்மெனத்
தேவவிந் திரனிற் றிருந்தப் பெற்ற
ஆய்பெரு நல்லியா ழமைவர வெழீஇக் 95
கான யானையுங் கரந்துறை புள்ளும்
ஏனைய பிறவு மானா வுவகையொடு
கேட்டவை யெல்லாம் வேட்டவை விரும்பி
வேண்டிய செய்தலி னீண்டிய மாதவன்
வரத்தின் வல்லே வல்லை யாகென 100
உரைத்தம் முனிவ னுவந்தனன் கொடுத்துப்
பெறலரும் பேரியாழ் பெற்ற வாறும்
ஆர்வ நெஞ்சின னாகிய கல்வி
நேர்தனக் கில்லா நெஞ்சு ணமைதி
யூகி நினக்கிங் கடைக்கல மென்பதும் 105
போகிய புகழோன் பணிப்பக் கொண்டு
தோழ னாகித் தோமில் கேள்வி
யாழும் பாட்டு மவைதுறை போகிக்
கல்லா நின்ற சில்லென் காலத்து
மைவரை மருங்கின் மடப்பிடி சூழத் 110
தெய்வ யானை நின்றது நோக்கிக்
கண்டே நின்று காத லூர்தர
மந்திர வாய்ப்பும் வல்ல யாழின்
கந்திர வகையுங் காண்பல் யானென
எழீஇயவ ணியக்கப் பொழிமத யானை 115
வேண்டிய செய்தலி னீண்டிய மாதவன்
பள்ளிக் குய்ப்ப நள்ளிருட் கூறும்
பாக ரேறினுந் தோற்கயி றிடினும்
நீமுன் னுண்ணினு நீங்குவல் யானென
ஆகு பொருள்கேட் டறிவுற் றெழுந்து 120
போதுங் காலை மாதவ னொருமகன்
வீயாச் செங்கோல் விக்கிர னொருநாள்
எச்ச மின்மையி னெவ்வங் கூராத்
துப்புர வெல்லாந் துறப்பென் யானெனத்
தற்பயந் தெடுத்தவன் றாணிழல் வந்தோன் 125
மதலை யாகுமிப் புதல்வன் யாரெனச்
செருமிரு சீற்றத்துக் குருகுலத் தரசன்
சாயீச் செங்கோற் சதானிகன் றேவி
அருமைசால் கற்பின் மிருகா பதியெனும்
நுங்கை தன்னகர்க் கங்குற் கிடந்தோட் 130
கின்னது நிகழ விவ்வயிற் றந்த
பொன்னணி பைம்பூட் புதல்வன் றானிவன்
ஐயாண்டு நிறைந்தன னாதலி னிவனைத்
தெய்வ ஞானந் திறப்படக் காட்டித்
தன்னகர்க் குய்ப்பெ னென்றலு மடிகள் 135
என்னுழைத் தம்மி னிறையென வியற்றித்
தாய மெல்லாந் தனக்குரித் தாக
ஏயர் கொற்ற மிவன்வயிற் கொடுத்துப்
பெறலரும் பெருந்தவத் துறுபயன் கொள்வலென்
றாய்புகழ் முனிவனொடு தேவியை யிரந்து 140
செருமிகு குருசிறன் மருமகற் றழீஇ
நீல யானை நின்றது பண்ணிக்
கோல வெருத்தங் குலவ வேற்றி
வளநகர் புக்குத்தன் னுளமனைக் கெல்லாம்
உதயண னிறையென வறிவரச் சாற்றி 145
வேத்தவை நடுவண் வீற்றினி திருத்தி
ஏயர் குலமுதற் கிறைவ னாகி
அவ்வழி மற்றுநீ வளர விவ்வழிப்

தேவியைப் பிரிந்த சதானிகன் செயல்

[தொகு]

பட்டதை யறியான் பயநிலங் காவலன்
கட்டழ லெவ்வமொடு கடவுளை வினவக் 150

முனிவன் கூற்று

[தொகு]

கடும்புள் ளெதிர்ந்து காட்டகத் திட்டதூஉம்
நெடுந்தோ ளரிவை நின்னைப் பெற்றதூஉம்
தகையுடை முனிவன் றலைப்பட் டதூஉம்
வகையுடை நல்யாழ் வரத்திற் பெற்றதூஉம்
விசையுடை வேழம் வணக்கும் விச்சையும் 155
மாமன் கொண்டுதன் மாணகர் புக்கதூஉம்
ஏயர்க் கிறையென வியற்றிய வண்ணமும்
மாசில் கொற்றவன் மறுத்திவண் வரவும்
ஆண்டகை மொய்ம்பினோ ரரசடிப் படுப்பதூஉம்
ஈண்டிவண் வந்துநீ வீற்றிருப் பதூஉம் 160
உள்ளுறுத் தோதியா னுள்ள முவப்ப
முற்பா னிகழ்ந்தவும் பிற்பாற் பெருக்கமும்
இனையவை யெல்லா மியற்படப் பிழையாது
வினவிய பொழுதின் விரித்துரைத் தனனோர்
பனுவ லாளனைப் பணிந்துகை கூப்பிக் 165
கண்போற் காதனின் கழிபே ரமைச்சன்
முன்போல் விளிந்து முடிக்குங் காரியம்
உண்டு மாங்கொல் கண்டுவந் தோர்களைக்
கண்டில மாதலிற் பணபொடு புணரக்
கேட்டபி ன்றிதும் யாமென வேட்ப 170
இன்னவை கிளந்துபின் றன்வயிற் றழீஇ
என்கூற் றிணையு நுங்கூற் றாகத்
தேன்சுவைக் கொளீஇ வேம்பி னூட்டும்
மகா அர்மருந் தாளரின் மறத்தகை யண்ணலை
நகாஅர் பல்லவர் நலம்புகழ்ந் தேந்தும் 175
விழுப்ப மெய்தி யொழுக்கியல் போம்பி
இழுக்கா தியன்ற விலாவா ணத்தயல்
உண்டாட் டயர்த லுறுதி யடைத்தென
வண்டார் மார்பனை வலியுள் ளுறீஇ
ஏழ்ச்சி வேண்டுஞ் சூழ்ச்சி கொடுக்கென 180
உள்ள தோழரு மொருப்பட் டெய்தி
வள்ளிதழ் நறுந்தார் வத்தவற் குறுகி
முறைபட வுணர்ந்த குறைவில் கட்டுரை
கொள்ளக் கூறலும் வள்ளலும் விரும்பி
நிதியக் கலத்தொடு பதிபல வருளிக் 185
கொற்ற முரசிற் கோடணை கொட்டி
ஓசைபோக் கினரா லுவகையின் மகிழ்ந்தென்.

2 11 அவலந் தீர்ந்தது முற்றிற்று.