பெருங்கதை/2 12 மாசனம் மகிழ்ந்தது
- பாடல் மூலம்
2 12 மாசன மகிழ்ந்தது
மாசனம்
[தொகு]ஓசை போக்கிய பின்றையோவா
மாசில் சிறப்பின் வான்பூத் தன்ன
நகரம் வறுவி தாகநாட் கொண்டு
இலாவாணத்தின் அயலிலுள்ள மலையின் இயற்கையழகும் செயற்கையழகும்
[தொகு]தகரங் கமழுந் தண்வரைச் சாரற்
றக்கோ ருறையுந் தாபதப் பள்ளியும் 5
கற்றோ ருறையுங் கடவுட் டானமும்
புக்கோர் புறப்பட லுறாஅப் பொலிவிற்
சுனையும் யாறு மினையவை மல்கி
மேவர வமைத்த மேதகு வனப்பிற்
கோலக் கோயிலொடு குரம்பை கூடிப் 10
மரங்கள் முதலியன
[தொகு]பலவு மாவு நலமா நாகமும்
மகிழும் பிண்டியும் வரியித ழனிச்சமும்
வேங்கையு மாவும் விளவும் வேயும்
கோங்கமுங் குரவுங் கொடிக்குருக் கத்தியும்
நறையு நந்தியு மறைபயி லகிலும் 15
வழையும் வாழையுங் கழைவளங் கவினிய
திகிரியுந் தில்லையும் பயில்பூம் பயினும்
முல்லையும் பிடாவுங் குல்லையுங் கொன்றையும்
குருந்தும் வெட்சியு நரந்தையு நறவும்
நறும்பா திரியு நாண்மலர்க் கொகுடியும் 20
இறும்பம லேலமு மேரில வங்கமும்
பைங்கூ தாளமும் வெண்பூஞ் சுள்ளியும்
கொய்தகை போந்துங் கைதகை காந்தளும்
திமிசுந் தேக்கு ஞெமையு மாரமும்
சேபா லிகையுஞ் செங்கொடு வேரியும் 25
தீவாய்த் தோன்றியுந் திலகமுந் திரிகோற்
பகன்றையும் பலாசு மகன்றலைப் புழகும்
குளவியுங் குறிஞ்சியும் வளவிய மௌவலும்
சிறுசெங் குரலியுஞ் சிறுசெண் பகமும்
நறும்பொற் கொட்டமுந் துறும்புபு கஞலி 30
இன்னவை பிறவும் பன்மரம் பயின்று
கொடிப்பூம் பந்த ரிடைப்பரந் தியன்ற
இடமிடந் தோறுங்கடனது வாகித்
தண்டாக் காதலி னுண்டாட் டுரைப்பேன்
மாசனம் மலைச்சாரலை யடைதல்
[தொகு]தேரும் வையமுஞ் சிவிகையும் பண்டியும் 35
ஊரு மூர்தியும் பிடிகையு முயர்வரை
மையணி வேழமு மாவும் பண்ணி
மடமொழி மகளிரு மைந்தரு மேறிக்
கடன்மலை பெயருங் காலம் போல
… விடு தேனிற் பூநகர் புல்லென 40
நீரணி பெருமலைச் சார லெய்தி
பாடியின் இயல்பு
[தொகு]மாசில் வானத்து மதிவிரிந் தன்ன
தூசக் குடிஞையுந் துலாமண் டபமும்
பல்காழ்த் திரையும் படாகையங் கொட்டிலும்
ஒல்காக் கூடமு மொருங்குதலைப் பிணங்கி 45
மன்றும் வீதியுந் துன்றிவீ றெய்தி
எவ்விடந் தோறு மவ்விடத் தாகி
உயர்மிசை யுலக நீங்கி நிலமிசை
அந்தர மருங்கி னந்தன வனத்தொ
டிந்திர னுரிமையொ டெண்கொண் டிறங்கின 50
இன்பம் பயந்த விலாவா ணத்தயல்
மன்பெருஞ் சோலை மலைவயிற் போகா
மகளிரும் மைந்தரும் பலவகைக் காட்சிகளைக் கண்டு மகிழ்தல்
[தொகு]அறைவாய் முரசி னதிர்க ணன்ன
நிறைவாய்த் தண்சுனை நிவந்த நீலத்
தொண்மலர் குற்ற மகளி ரவைநம் 55
கண்மல ரழித்த கவின போன்மென
நீலமொ டிகன்ற நேரிழை மகளிரைக்
கோலமொடு கலந்த குமரர் மற்றவை
தேம்புடை விரியக் கூம்பிடங் காட்டிநும்
கண்ணிழ லெறிப்பக் கலக்கமொடு நடுங்கி 60
ஒண்ணிழ லிழந்த வொளிய வாகித்
தொழுவன விரக்குந் தோழிகைக் கொடீஇ
ஒழிக வுள்ளழி விவற்றொடு நீரெனக்
கழுமிய வெகுளியர் காணக் காட்டி
மாறாத் தானை மன்னனை வழுத்தி 65
ஆறாக் காதலொ டாடின ரொருசார்
பூந்தண் சாரற் பொங்குகுலை யெடுத்த
காந்தட் கொழுமுகை கண்ட மகளிர்நம்
கைவிர லெழினலங் கவர்ந்தன விவையெனக்
கொய்பூங் காந்தள் கொண்ட கையினர் 70
எமக்கணி யுடையரென் றெம்மொ டுறையுநீர்
நுமக்கணி யுடையரை யெதிர்ந்தனி ரீங்கென
எழில் விர றோறு மியைந்தணி யாகிய
கழுமணி மோதிரங் கழித்தனர் களைந்து
கவற்சி கொண்ட காமத் துணைவியர் 75
இயற்கை யோரி னிற்றென மதித்துக்
காலக் காந்தட் கதழ்விடங் காட்டிக்
கோலக் கொழுவிர லேலொளி யெறிப்ப
அரும்பென நில்லா வஞ்சின வளிய
விரிந்த விவற்றொடு விடுமின் வேர்வென் 80
றிரந்தனர் தெருட்டி யியைந்தன ரொருசார்
தேங்கமழ் சிலம்பிற் பாங்குபட நிவந்த
வேங்கை விரியிணர் விரும்புபு கொய்து
புணர்வெங் காதலர் புனையிருங் கூந்தற்
கிணரிவை யணிமினென் றிரந்தனர் நீட்ட 85
விரும்பினர் கொண்டு வீயென வுணரார்
அரும்பிள வனமுலை யாகத் தருகர்ச்
சிதர்வன கிடந்த சில்லரிச் சுணங்கிவை
புதல்வர்ப் பயப்பிற் புலந்துகை நீங்கி
மலையக மருங்கின் மரம்பொருந் தினவெனச் 90
சிலையணி யழித்த சென்றேந்து புருவத்
தரிமலர் நெடுங்க ணழலெழ நோக்கித்
தெரிவை மகளிர் திண்பார் வீசிட
மாலை யோதி மடவரன் மகளிர்க்குக்
காலை கழியினுங் கழியா திதுவென 95
உவந்த வுள்ளமொடு நயந்துபா ராட்டி
அன்மையை யுணர்த்த வண்மையிற் றாழ்ந்து
வீழ்பூங் கொம்பின் வேங்கை நிரந்த
ஆய்பூங் கானத் தாடின ரொருசார்
அரும்பெறற் காதலொ டணிநமக் காகி 100
மருங்குலு மாகமும் வருந்தப் போந்த
கருங்கண் வெம்முலை யரும்பி னழித்து
வண்பொற் றட்ட மலர்ந்த வாதலின்
நண்பிற் கொத்தில நம்மோ டிவையெனக்
கோங்கங் குறுகல் செல்லா ரயல 105
மாம்பொழிற் சோலை மகிழ்ந்துட னாடும்
ஒள்ளிழை மகளிர்க் கொளிர்மதி யன்ன
சுள்ளிவெண் சூழ்ச்சி சுரும்புணத் தொடுத்து
நெறிப்பல கூந்த னேயந் தோன்றக்
குறிப்பறிந் தணிந்து கூடின ரொருசார் 110
நாக நறுமர நவியத்திற் றுணித்து
வேக வெவ்வழல் விளிய மாட்டி
மானிணப் புழுக்கலொடு தேனெய் விதவையிற்
பன்முறை பகர்ந்து தொன்முறை பிழையார்
நன்னாட் கொண்டு தன்னையர் பரியப் 115
பொன்னேர் சிறுதினை விளைந்த புனந்தொறும்
சாயலுங் கிளவியுந் தம்மொடு நிகர்த்த
தோகையுங் கிளியுந் தொக்கவை யகலத்
துறுகல் வேயின் குறைகண் டன்ன
தடந்தோ ளசையத் தட்டை புடைத்து 120
முடந்தாட் பலவின் முன்றி னின்ற
கானவர் மகளிர் காரிகைநோக்கி
வானவர் மகளி ரல்ல ராயின்
வளமலைச் சாரல் வரைமிசை யுறையும்
இளநல மகளி ரிவரென வெண்ணி 125
அஞ்சி லோதிய ரஞ்சின ரொருசார்
எச்சார் மருங்கினு மின்னோர் பிறரும்
விச்சா தரியரின் வியப்பத் தோன்றிச்
சுனைப்பூக் குற்றுஞ் சுள்ளி சூடியும்
சினைப்பூ வணிந்துங் கொடிப்பூக் கொய்தும் 130
மகிழின் வட்ட வார்மலர் தொடுத்தும்
பவழப் பிண்டிப் பல்லிணர் பரிந்தும்
செண்ணத் தளிரிற் கண்ணி கட்டியும்
மாலை தொடுத்து மலைவளம் புகழ்ந்தும்
கோலக் குறிஞ்சிக் குரவை யாடியும் 135
மணிமயிற் பீலி மாமயிற் றொழுதி
அணிநல நோக்கியு மாடல்கண் டுவந்தும்
மாதர்ப் பைங்கிளி மழலை கேட்டும்
மகளிர் நாப்பண் மன்னவன் போலத்
துகளணி யிரும்பிடி துன்னுபு சூழ 140
அந்தண் மராஅத்த பைந்தளிர் வாங்கிக்
கண்ணயற் பிறந்த கவுளிழி கடாத்துத்
தண்ணறு நாற்றத் தாழ்ப்பத் தவிர்த்துப்
பெருமையிற் பிறப்பினும் பெற்றி போகாச்
சிறுமை யாளர் செய்கை போல 145
மூசுத லோவா மிஞிற்றின மிரிய
வீசுத லோவா விழுத்தகு தடக்கை
இருங்களிற் றினநிரை விரும்புபு நோக்கியும்
கொய்குர லேனலுங் குளிர்சுனைப் பாறையும்
மைவளர் சென்னி மரம்பயில் கானமும் 150
மலர்ப்பூஞ் சோலையுந் திளைத்த லானார்
ஆடியும் பாடியுங் கூடியும் பிரிந்தும்
ஊடியு முணர்ந்து மோடியு மொளித்தும்
நாடியு நயந்து நலம்பா ராட்டியும்
மைந்தரு மகளிரு மணந்துவிளை யாடி 155
மைந்துற் றனரால் வளமலை புகழ்ந்தென்.
2 12 மாசன மகிழ்ந்தது முற்றிற்று.