உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8-வது அதிகாரம்

ஸுகாரம்பம்

துக்கோஜிராவ் மல்லிகாவைத் தனியாக விட்டுவந்தபோது, அம்மடந்தை கரைகடந்த துயரத்தினாலும், வியப்பினாலும் தடுமாறி செய்வது யாதென்பதை அறியாதவளாய்க் குழம்பிய மனத்துடன் மெய்ம்மறந்து நின்றாள்; தன்னை உயிர்போல மதித்த தனதரிய காதலரான வஸந்தராவை தான் இன்னொரு முறை பார்க்கமுடியாமல் போனதைப்பற்றி நினைத்து நினைத்து உருகினாள். அவர் தன்னை 'மல்லிகா' வென்றும், 'கண்ணே' யென்றும், அவைபோன்ற வேறு பற்பல அருமையான சொற்க ளாலும் அன்பொழுக அழைத்த குரல் அவளது செவிகளில் அப்போதும் ஒலித்துக்கொண்டிருந்தது. எத்தனையோ நூறுகாத தூரத்துக்கு அப்பாலுள்ள கொழும்பு தேசத்திற்குத் தான் போய் விட்டால், அதன்பிறகு தான் என்றைக்கும் திரும்பிவர முடியாதென்பதை எண்ணியெண்ணி அவள் உயிரழிந்தாள்; தன்னை மனைவியாக்கிக்கொள்ள ஆவல் கொண்டிருந்த வஸந்தராவின் எண்ணத்தில் கடவுள் மண்ணைப் போட்டதை நினைத்து மிகவும் ஏங்கினாள்; அதுகாறும் எவ்வித ஸுகத்தையும் பிறர் காட்டும் அன்பையும் அநுபவித்தறியாதிருந்து, அப்போதே அத்தகைய பெருத்த பாக்கியத்தை தான் அநுபவிக்க எண்ணிய எண்ணம் பாழானதைப் பற்றி நினைத்து நிலைதடுமாறிச் சோர்ந்தாள்; கடவுள் பிறவிக் குருடனுக்குக் கண்களைக் கொடுத்து உலகத்தின் அழகைக்காட்டி அடுத்த நிமிஷத்தில் அவற்றைப் பறித்துக் கொண்டதைப்போல தன் கதி ஆனதை நினைத்து வாடி வதங்கி அழுதாள்; எப்போதும் மாறாத உறுதியோடு தன் மனதிற் பதிந்திருந்த வஸந்தராவின் இனிய வடிவத்தையே எங்கும் கண்டாள்.

அவ்வாறு இரண்டொரு நிமிஷத்தில் அவளது விசனம் பொறுக்கலாற்றாத உச்சநிலையை அடைந்தது. அந்த வீட்டிலிருப்பது, நெருப்புத் தணல், பாம்புகள், தேட்கள் முதலியவற்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/78&oldid=1230603" இலிருந்து மீள்விக்கப்பட்டது