உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வசந்த மல்லிகா.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

வஸந்தமல்லிகா

"நான் இத்தனை நாளாக கிருஷ்ணவேணியோடு இங்கே வந்து பார்த்துக் கொண்டிருந்தேனல்லவா எனக்கு இது மாத்திரம் அல்ல, மற்ற எல்லோருடைய பேச்சும் மனப்பாடம் ஆய்விட்டது. ஆகையால், நான் இதைப் படிக்க வேண்டிய அவசியமே இல்லை” என்றாள்.

அதைக் கேட்ட கோவிந்தசாமி ராவின் ஆநந்தத்திற்கும், அவளது விஷயத்தில் ஏற்பட்ட வியப்பிற்கும் அளவில்லை. "பலே! உன் சாமர்த்தியமே சாமர்த்தியம்! மூளை இருந்தாலும் இப்படியல்லவா இருக்க வேண்டும். நாங்களெல்லோரும் எதற்குப் பிரயோசனம்" என்று அவளைப் பெரிதும் புகழ்ந்து, அதை ஒப்புவிக்கும்படி கேட்க, அவள் நாடகத்தில் ஊர்வசி எப்படி அழகாய் நடிக்க வேண்டுமோ அவ்விதம் சமயோசிதமான அபிநயங்களோடு நடித்த வண்ணம், தத்ரூபமாய் பாடத்தை ஒப்புவித்தாள். அதைக் கண்ட கோவிந்தசாமிராவ் பூரித்து புளங்காகிதமடைந்து தம்மை மறந்தார். அவள் தமயந்தியைக் காட்டிலும் பதின் மடங்கு விசேஷமாக நடித்ததைக்கான அவர் அடைந்த வியப்பிற்கும், திகைப்பிற்கும் எல்லையில்லை. "என்னுடைய கவலை நீங்கியது; ஒத்திகையை இன்றைக்கே முடித்து விடுவோம்" என்று கூறி, திரும்பவும் ஒத்திகையைத் தொடக்கத்திலிருந்து ஆரம்பித்து, நாடகத்தைக் கடைசி வரையில் நிறைவேற்றினார். அங்கிருந்தோர் தமயந்தி இல்லையென்பதைப் பற்றி சிறிதும் நினைக்கவேயில்லை; அன்று முழுதும் அடக்கவொண்ணாத பெருமகிழ்ச்சியடைந்திருந்த கோவிந்தசாமிராவ், அன்று நடந்த விஷயங்களையெல்லாம் அரண்மனை பாயிஸாகேப்புகளுக்குச் சொல்லியனுப்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வசந்த_மல்லிகா.pdf/132&oldid=1232122" இலிருந்து மீள்விக்கப்பட்டது