92
வஸந்தமல்லிகா
அவளது அழகிய முகம் மாறியது; தேகம் சோர்வடைந்தது. அந்தக் குறிப்பையறிந்த கிருஷ்ணவேணி, "அம்மா ஏன் உன் முகம் இப்படி மாறுபட்டது? நான் நாடகம் ஆடுகிறவள் என்று சொன்னவுடன் ஏதோ ஒருவித வித்தியாசத்தைக் காட்டுகிறாயே, கேவலம் வயிற்றுப் பிழைப்புக்காக நாடகம் ஆடும் கூத்தாடிகளென்று எங்களை எண்ண வேண்டாம். நாங்கள் மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நாடகத்தில் சேர்ந்திருப்பவர்கள் எல்லாரும் இல்லறம் நடத்தும் குலஸ்திரீகளேயன்றி விபசாரிகளல்ல. அரண்மனையிலுள்ள பாயிசாகேப்புகள் புருஷர்கள் நடனர்களாக நடிப்பதைப் பார்க்கக் கூடாதென்று எங்களை தயாரித்திருக்கிறார்கள். தவிர, நாடகம் பார்ப்பதற்கு அரண்மனையின் சிப்பந்திகள், பாயிஸாகேப்புகள், அவர்களுடைய பந்துகளான முக்கியமான சில பெரிய மனிதர்கள் ஆகிய இவர்களைத் தவிர பொது ஜனங்கள் எவரும் வரக்கூடாது. நாடகம் அரண்மனையின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கொட்டகையில் நடக்கிறது. ஊருக்குள் பொதுவான இடத்தில் நடப்பதல்ல என்றாள். அதைக்கேட்ட மல்லிகா ஒருவாறு திருப்தியடைந்தவளாய், "அம்மா! நான் வித்தியாசமாக நினைத்ததைப் பற்றி மன்னிக்க வேண்டும்" என்று நிரம்பவும் பணிவாக நயந்து வேண்டினாள். உடனே கிருஷ்ணவேணி, "அதிருக்கட்டும்; உன்னுடைய பெயரென்ன?" என்றாள். மல்லிகா உடனே தனது பெயரைத் தெரிவிக்க, கிருஷ்ணவேணி, "நிரம்பவும் சரியான பெயர்தான்; அந்தப் பெயர் உனக்கு நன்றாகப் பொருந்துகிறது. என்னுடைய பெயரையறிய நீ விரும்புகிறதாக உன் முகம் காட்டுகிறது. என்னுடைய பெயர் கிருஷ்ணவேணிபாயி" என்றாள்.
அந்தச் சமயத்தில் அவளது தந்தை, "குழந்தாய்! நாழிகையாகிறது. மல்லிகா களைத்துப் போயிருக்கிறாள். சீக்கிரம் போஜனத்துக்கு அழைத்துக்கொண்டு போ!' என்றான். அதைக் கேட்ட கிருஷ்ணவேணி அவளை அன்போடு உள்ளே அழைத்துக் கொண்டு போய் மாதுரியமான போஜனம் பரிமாறி உண்பித்து, அன்றிரவு சுகமான சயனத்தில் படுத்துக் கொள்ளச் செய்து, தானும் படுத்துத் துயின்றாள்.