பெருங்கதை/4 17 விரிசிகை வதுவை

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

4 17 விரிசிகை வதுவை

விரிசிகையின் தந்தை தவம்புரியச் செல்லல்[தொகு]

விடுத்தனர் போகி விரிசிகை தன்றமர்
அடுத்த காதற் றந்தைக் கிசைப்ப
மாதவன் கேட்டுத்தன் காதலி தனைக்கூஉய்
வடுத்தீர் பெரும்புகழ் வத்தவர் பெருமாற்
கடுத்தனெ னங்கையை நின்னை யானும் 5
விடுத்தனென் போகி வியனுல கேத்த
வடுத்தீர் மாதவம் புரிவேன் மற்றெனக்
கேட்டவள் கலுழ வேட்கையி னீக்கிக்
காசறு கடவுட் படிவங் கொண்டாங்
காசறச் சென்றபின் மாசறு திருநுதல் 10

விரிசிகையின் தமர் அவள் விளையாடிய பொருள்களைக் கொண்டு உடன் செல்லல்[தொகு]

விரிசிகை மாதர் விளையாட்டு விரும்பும்
பள்ளியுட் டன்னொடு பலநாள் பயின்ற
குயிலு மயிலுங் குறுநடைப் புறவும்
சிறுமான் பிணையு மறுநீங் கியூகமும்
காப்பொடு பேணிப் போற்றுவன ளுவப்பிற் 15
றந்த பாவையுந் தலையாத் தம்முடை
அந்தணர் சாலை யருங்கல மெல்லாம்
அறிவனர் தழீஇத் தகைபா ராட்டிப்
பூப்புரி வீதி பொலியப் புகுந்து
தேற்றா மென்னடைச் சேயிழை தன்னொடு 20
செல்வோர் கேட்பப் பல்லோ ரெங்கும்

கண்டோர் கூற்று[தொகு]

குடிமலி கொண்ட கொடிக்கோ சம்பி
வடிநவில் புரவி வத்தவர் பெருமகற்
காக்கம் வேண்டிக் காப்புடை முனிவர்
அஞ்சுதரு முதுகாட் டஞ்சா ரழலின் 25
விஞ்சை வேள்வி விதியிற் றந்த
கொற்றத் திருமகண் மற்றிவ டன்னை
ஊனார் மகளி ருள்வயிற் றியன்ற
மானேர் நோக்கின் மடமக ளென்றல்
மெய்யன் றம்மொழி பொய்யென் போரும் 30
மந்திர மகளிரிற் றோன்றிய மகளெனின்
அந்தளிர்க் கோதை வாடிய திருநுதல்
வேர்த்தது…..
… பெருமைப் பயத்தாற் பயந்த
 மாதவன் மகளே யாகுமிம் மாதர் 35
உரையன்மி னிம்மொழி புரையா தென்மரும்
அறுவி றெண்ணீ ராழகய முனிந்து
மறுவில் குவளை நாண்மலர் பிடித்து
நேரிறைப் பணைத்தோள் வீசிப் போந்த
நீரர மகளிவ ணீர்மையு மதுவே 40
வெஞ்சினந் தீர்ந்த விழுத்தவன் மகளெனல்
வஞ்ச மென்று வலித்துரைப் போரும்
கயத்துறு மகளெனிற் கயலேர் கண்கள்
பெயர்த்தலு மருட்டி யிமைத்தலு முண்டோ
வான்றோய் பெரும்புகழ் வத்தவர் பெருமகன் 45
தேன்றோய் நறுந்தார் திருவொடு திளைத்தற்
கான்ற கேள்வி யருந்தவன் மகளாய்த்
தோன்றிய தவத்த டுணிமினென் போரும்
பரவை மாக்கடற் பயங்கெழு ஞாலத்
துருவின் மிக்க வுதயணற் சேர்ந்து 50
போக நுகர்தற்குப் புரையோர் வகுத்த
சாபந் தீர்ந்து தானே வந்த
கயக்கறு முள்ளத்துக் காமங் கன்றிய
இயக்கி யிவளே யென்மக ளென்று
மாதவ முனிவன் மன்னற்கு விடுத்தரல் 55
ஏத மாங்கொலிஃ தென்றுரைப போரும்
ஈரிதழ்க் கோதை யியக்கி யிவளெனின்
நேரடி யிவையோநிலமுத றோய்வன
அணியும் பார்வையு மொவ்வா மற்றிவள்
மணியணி யானை மன்னருண் மன்னன் 60
உதயண குமர னுறுதா ருறுகென
நின்ற வருந்தவ நீக்கி நிதானமொடு
குன்றச் சாரற் குறைவின் மாதவர்
மகளாய் வந்த துகளறு சீர்த்தி
நாறிருங் குழல்பிற கூறன்மி ளென்மரும் 65
இமிழ்திரை வையத் தேயர் பெருமகன்
தமிழியல் வழக்கினன் றணப்புமிகப் பெருக்கி
நிலவரை நிகர்ப்போ ரில்லா மாதரைத்
தலைவர விருந்தது தகாதென் போரும்
சொல்லியல் பெருமான் மெல்லிய றன்னைக் 70
கண்டோர் விழையுங் கானத் தகவயின்
உண்டாட் டமர்ந்தாங் குறையுங் காலைத்
தனிமை தீரத்த திருமக ளாதலின்
இனிய னாதனன்றென்றுரைப் போரும்
பவழமு முத்தும் பசும்பொன் மாசையும் 75
திகழொளி தோன்றச் சித்திரித் தியற்றிய
அணிகல மணிவோ ரணியி லோரே
மறுப்பருங் காட்சி யிவள்போன் மாண்டதம்
உறுப்பே யணிகல மாக வுடையோர்
பொறுத்தன் மற்றுச்சில பொருந்தா தென்கரும் 80
யாமே போலு ம.குடை யோமெனத்
தாமே தம்மைத் தகைபா ராட்டி
நாணிகந் தொரீஇய நாவுடைப் புடையோர்
காணிக மற்றிவள் கழிவனப் பென்மரும்
ஏதமி லொழுக்கின் மாதவ ரிற்பிறந் 85
தெளிமை வகையி னொளிபெற நயப்பப்
பிறநெறிப் படுதல் செல்லாள் பெருமையின்
அறநெறி தானே யமர்ந்துகை கொடுப்ப
அம்மை யணிந்த வணிநீர் மன்றல்
தம்முட் டாமே கூடி யாங்கு 90
வனப்பிற் கொத்த வினத்தின ளாகலின்
உவமமி லுருவி னுதயணன் றனக்கே
தவமலி மாதர் தக்கன ளென்கரும்
இன்னவை பிறவும் பன்முறை பகர

விரிசிகை அரண்மனையை அடைதல்[தொகு]

ஆய்பெருஞ் சிறப்பி னருந்தவர் பள்ளியுட் 95
பாயற் கிடந்த பன்மலர் மிதிப்பினும்
அரத்தங் கூருந் திருக்கிளர் சேவடி
சின்மலர் மிதித்துச் சிவந்துமிகச் சலிப்ப
மென்மெல வியலி வீதி போந்து
கொடிபட நுடங்குங் கடிநகர் வாயில் 100
முரசொடு சிறந்த பல்லியங் கறங்க
அரச மங்கல மமைவர வேந்திப்
பல்பூம் படாகை பரந்த நீழல்
நல்லோர் தூஉ நறுநீர் நனைப்பச்
சேனையு நகரமுஞ் சென்றுட னெதிர்கொள 105
ஆனாச் சிறப்போ டகன்மனை புகுதலிற்

உதயணன் விரிசிகையை மணந்து இன்புறல்[தொகு]

றானை வேந்தன் றானெறி திரியான்
பூவிரி கூந்தற் பொங்கிள வனமுலைத்
தேவியர் மூவருந் தீமுன் னின்றவட்
குரிய வாற்றி மரபறிந் தோம்பி 110
அருவிலை நன்கல மமைவர வேற்றிக்
குரவர் போலக் கூட்டுபு கொடுப்பக்
கூட்டமை தீமுதற் குறையா நெறிமையின்
வேட்டவட் புணர்ந்து வியனுல கேத்த
அன்புநெகிழ்ந் தணைஇ யின்சுவை யமிழ்தம் 115
பனியிருங் கங்குலும் பகலு மெல்லாம்
முனிவில னுகர்ந்து முறைமுறை பிழையாது
துனியும் புலவியு மூடலுந் தொற்றிக்
கனிபடு காமங் கலந்த களிப்பொடு
நற்றுணை மகளிர் நால்வரும் வழிபட 120
இழுமென் செல்வமொ டின்னுயி ரோம்பி
ஒழுகுவனன் மாதோ வுதயண னினிதென்.

4 17 விரிசிகை வதுவை முற்றிற்று. நான்காவது வத்தவ காண்டம் முற்றிற்று.