வேடன்வலைப் பேடன்னம்
17
ஸகா : இந்த மாளிகைக்குள் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் அநேகமிருக்கின்றன. அங்கேயுள்ள அதிசயங்களையும் விநோத வேலைப்பாடுகளையும் கண்டால் இன்னும் அதிகமாக வியப்படைவீர்கள். இறந்துபோன எஜமானர் தம்முடைய சுகாநுபவத்துக்குத் தேவையான பொருட்களைச் சேகரஞ் செய்து இந்த பங்களாவை சிங்காரிப்பதிலேயே தமது ஆயுட்காலம் முழுதையும் போக்கினாரல்லவா! ஆனால் அவர் இறந்த பின் அநுபவிப்போரில்லாமையால் பூட்டப் பெற்றிருப்பதால் உட்புறம் ஒருமாதிரி ஒளி மழுங்கித் தோன்றும்; ஆனால் இதில் வசிக்க ஆரம்பித்து எல்லாவற்றையும் கத்திசெய்து ஏற்பாடாக வைத்துக் கொண்டால் இந்த இடம் ஒரு ரிஷி ஆசிரமம்போலப் பரமாநந்தமாய்த் தோன்றும்.
ஜெமீந் : அதிருக்கட்டும். நீர் இந்த சமஸ்தானத்துக்கு சர்வாதிகாரி உத்தியோகத்தில் அமர்ந்து எவ்வளவு காலம் இருக்கும்?
ஸகா : 27 வருஷத்துக்கு மேலாகிறது.
ஜெமீந் : அவர் இவ்விடத்துக்கு வந்து கடைசியாக இருந்தது எப்போது?
ஸகா : அவர் இறந்துபோவதற்கு முன் ஒரு மாசகாலம் இங்கிருந்து, இவ்விடத்திலேயே உயிர்துறந்தார்.
ஜெமீந் : அவர் தம்முடைய சொத்துக்களையும் சமஸ்தானத்தையும் மரணாந்தரசாஸனத்தில் எனக்கு எழுதி வைத்தாரே; அது இவ்விடத்தில்தானோ?
ஸகா : இல்லை இல்லை. தானதருமங்களின் பொருட்டு விநியோகம் செய்ததைத் தவிர மிகுதியிருக்கிற பொருள்கள், மாளிகைகள், ஜெமீன்கள் முதலிய இரண்டு கோடி ரூபாய் பெறுமானமுடைய ஐசுவரியத்தையும், இறந்துபோவதற்கு 2 வருஷத்துக்கு முன்பே உங்கள் பேரில் எழுதி பத்திரத்தை என்னிடம் ரகஸியமாய்க் காண்பித்தார். அந்த சாஸனத்தை அவர் இறந்த பின் அவருடைய பொக்கிஷ சாலையிலிருந்து கண்டெடுத்து நான் உங்களுக்கு அனுப்பினேன்.
ஜெமீந் : எல்லாம் சரிதான்; ஆனால், இதில் எனக்கொரு சந்தேகம் இருக்கிறது.
வ.ம.-3