உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

குயிற் பாட்டு

முன்னைப்போற் கொம்பு முனைகளிலே வந்தொலிக்க,
நாணமில்லாக் காதல்கொண்ட நானுஞ் சிறுகுயிலை
வீணிலே தேடியபின், வீடுவந்து சேர்நதுவிட்டேன்.
எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை;
கண்ணிலே நீர்ததும்பக் கானக் குயிலெனக்கே 110
காதற் கதையுரைத்து நெஞ்சங் கதைத்ததையும்,
பேதைநான் அங்கு பெரியமயல் கொண்டதையும்,
இன்பக் கதையின் இடையே தடையாகப்
புன்பறவை யெல்லாம் புகுந்த வியப்பினையும்,
ஒன்றைப் பொருள்செய்யா உள்ளத்தைக் காமவனல் 115
தின்றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும்,
சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு
முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும்,
இத்தனைகோ லத்தினுக்கு யான்வேட்கை தீராமல்,
பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும் 120
எண்ணியெண்ணிப் பார்த்தேன். எதுவும் விளங்கவில்லை;
கண்ணிரண்டும் மூடக் கடுந்துயிலில் ஆழ்ந்துவிட்டேன்.

8. நான்காம் நாள்

நான்காம்நாள் என்னை நயவஞ் சனைபுரிந்து
வான்காதல் காட்டி மயக்கிச் சதிசெய்த
பொய்ம்மைக் குயிலென்னைப் போந்திடவே கூறியநாள்
மெய்ம்மை யறிவிழந்தேன். வீட்டிலே மாடமிசை
சித்தத் திகைப்புற்றோர் செய்கை யறியாமல், 5
எத்துக் குயிலென்னை எய்துவித்த தாழ்ச் சியெலாம்
மீட்டும் நினைத்தங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே,
காட்டுத் திசையினிலென் கண்ணிரண்டும் நாடியவால்
வானத்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும்
யானதனைக் கண்டே, 'இது நமது பொய்க்குயிலோ?' 10
என்று திகைத்தேன்; இருந்தொலைக்கே நின்றதனால்
நன்று வடிவம் துலங்கவில்லை; நாடுமனம்
ஆங்கதனை விட்டுப் பிரிவதற்கு மாக வில்லை;
ஓங்குந் திகைப்பில் உயர்மாடம் விட்டுநான்