உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருளும் ஒளியும்

25

தப்பி முகஞ்சுளித்துத் தாவி யொளித்திடவும், 75
ஒப்பிலா மாயத்(து) ஒருகுயிலுந் தான்மறையச்
சோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க
மேலைச் செயலறியா வெள்ளறிவிற் பேதையேன்
தட்டுத் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே
குட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை. 80

6. இருளும் ஒளியும்

வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்;
மெய்யெல்லாஞ் சோர்வு விழியில் மயக்கமுற
உய்யும் வழியுணரா துள்ளம் பதைபதைக்க
நாணுந் துயரும் நலிவுறுத்த நான்மீண்டு 5
பேணும்மனை வந்தேன்; பிரக்கினைபோய் வீழ்ந்துவிட்டேன்;
மாலையிலே மூர்ச்சைநிலை மாறித் தெளிவடைந்தேன்;
நாலுபுறமுமெனை நண்பர் வந்து சூழ்ந்துநின்றார்;
ஏனடா மூர்ச்சையுற்றாய்? எங்கு சென்றாய்? ஏது செய்தாய்?
வானம் வெளிறுமுன்னே வைகறையி லேதனித்துச் 10
சென்றனை என்கின்றாரச் செய்தி என்னே? ஊணின்றி
நின்றதென்னே? என்று நெரித்துவிட்டார் கேள்விகளை;
இன்னார்க் கிதுசொல்வ தென்று தெரியாமல்,
என்னாற் பலவுரைத்தல் இப்பொழுது கூடாதாம்;
நாளை வருவீரேல் நடந்ததெலாஞ் சொல்வேன் இவ் 15
வேளை எனைத்தனியே விட்டகல்வீர் என்றுரைத்தேன்;
நண்பரெல்லாஞ் சென்றுவிட்டார்; நைந்துநின்ற தாயார்தாம்
உண்பதற்குப் பண்டம் உதவிநல்ல பால்கொணர்ந்தார்;
சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன்;
முற்றும் மறந்து முமுத்துயிலில் ஆழ்ந்து விட்டேன். 20
பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும்
மண்டு துயரரெனது மார்பை யெலாங் கவ்வுவதே!
ஓடித் தவறி உடையனவாம் சொற்களெலாம்;
கூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம்;
நாசக் கதையை நடுவே நிறுத்திவிட்டுப் 25

கு. பா.—4