பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

கும் வேலையையும், மற்றும் பல பணிகளையும் சாதாரண நாட்டுப் பொதுமக்களுள் சிலர் மேற்கொண்டு ஆற்றி வந்தனர். ஏதென்ஸ் நகரில் வரி என்பது திட்டமாகக் குடிமக்களை வருத்திப் பெறத்தக்க நிலையில் இல்லை. நாட்டுக்கு வரும் வருமானம் துறைமுகச் சுங்கம், குற்றவாளிகள் கட்டும் தண்டனைப் பொருள், வெள்ளிச் சுரங்கத்தின் மூலம் கிடைக்கும் வருவாய், நேச நாடுகள் கட்டும் கப்பம் ஆகிய இவைகளே அன்றி வேறு இல்லை.

நாட்டுக்கு விசேட காலங்களில் நாடகங்களை நடத்துவதற்கு வேண்டிய மேடை முதலியவற்றை அமைக்க வேண்டுமானாலும், இவற்றின் பொருட்டு அரசாங்கம் கவலை கொள்ள வேண்டுவதில்லை. அக் காலங்களில் செல்வர்கள் முன்வந்து அவற்றிற் ஆவன செய்து செல்வத்தை ஈந்து பூர்த்தி செய்வர் இத்தகைய நாடு அன்றோ, எத்துறையிலும் மேம்பாடு உறும். எல்லாம் அரசாங்கமே செய்யவேண்டு மென்று எதிர்பார்த்தால் நடக்கக் கூடிய காரியமாகுமா? அப்படி எதிர்நோக்கின் குடிமக்களை வருத்தி வரிப்பணம் பெற்றுத்தானே அது நடத்த முன்வரும் ? ஆகவே, எந்நாட்டிலும் நாட்டு நலனுக்காகச் செல்வக் குடியினர் முன்வந்து அதற்குரிய செலவை ஏற்றல் சாலச் சிறந்த பண்பாடாகுயம். ஏதென்ஸ் நகரச் செல்வர் மனமுவந்து பொது நலனுக்குச் செலவு செய்து வந்ததைப் பாராட்டியே ஆகவேண்டும்.

“செல்வத்துப் பயனே ஈதல்,
துய்ப்பேம் எனினே தப்புந பலவே”

என்பது அச் செல்வர் இயல்பு போலும் !