பக்கம்:வள்ளுவர் உள்ளம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


வள்ளுவர் உள்ளம்

ஆகவே, உள்ளம் மகிழ்கின்ற இந்த நல்ல நாளில், என்னைப் பேசப் பணித்துள்ள ‘வள்ளுவர் உள்ளம்’ என்னும் பொருள்பற்றி மகிழ்வோடு பேசுகின்றேன்.

திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர். அவர் 1978 ஆண்டுகட்குமுன்பு வாழ்ந்தவர். மதுரையில் பாண்டிய அரசரது அரண்மனை உள்படுகருமத் தலைவராயிருந்தவர். சிறந்த அறிஞர். அவருடைய உள்ளம் திருக்குறளில் பரவிக் காணப்படுகிறது.

சங்க நூல்களிற் பல புலவர்களின் உள்ளங்கள் பல திறப்பட்ட கருத்துக்களாகப் பரவிக்கிடக்கின்றன. ஆனால் வள்ளுவர் உள்ளம் எதைத் தொட்டாலும், தானே அதுவாகத் துடிக்கிறது. முத்துக்களில் உள்ள நீரோட்டத்ன்தப் போல ஒவ்வொரு குறளிலும் உயிரோட்டத்தைக் காணலாம். 1330 குறள்களும் அப்படியே. அதிற் சில குறள்களை மட்டும் உங்கள்முன் வைக்கிறேன்:

நீங்கள் மாம்பழக் கடைக்குப் போகிறீர்கள். அங்கு உங்களுக்குப் பழத்தின் சுவை அறிய ஒரு சின்னத் துண்டு 'சாம்பிளாக' கொடுக்கப்படுகின்றது. அதுபோல இன்று உங்களுக்குத் திருக்குறள் சாம்பிள்கள் சிலவற்றை நான் கொடுக்கிறேன். சுவைத்துப் பாருங்கள். புறநானூறு போன்ற இலக்கியங்கள் முள் நிறைந்த பலாப்பழம் போன்றவை, முள் நீக்கிச் சுளைகளையாக எடுத்துக் கொடுத்தால்தான். "ஆ! இனிக்கிறதா, எவ்வளவு சுவை! என்பீர்கள், அப்படிச் சற்று முயற்சி எடுத்து அவைகளைச் சுவைக்கவேண்டும். ஆனால், திருக்குறளைச் சுவைப்பது மாம்பழத்தைச் சுவைப்பதுபோல் மிக எளிது. குறள் முழுவதிலும் அவரது உள்ளத்தைக் காணலாம்,