2.இளங்கோவடிகள்
பாரதநாடு ஒரு பழம் பெருநாடு. அந்நாட்டின் தென்கோடியாய்த் திகழ்வது குமரி முனை. குமரிக் கரையிலே நின்று கடலைக் காண்பது ஒர் ஆனந்தம். தமிழ் நாட்டுக் குணகடலும் குடகடலும் குதித்தெழுந்து ஒன்றோடொன்று குலாவக் காண்பது குமரிக்கரை. கருமணலும் வெண்மணலும் அடுத்தடுத்து அமைந்து கண்ணுக்கு விருந்தளிப்பதும் அக்கரையே. கன்னித் தமிழும் கவின் மலையாளமும் கலந்து மகிழக் காண்பது அக்கரையே.
இத்தகைய குமரிக் கடற்கரையிலே வந்து நின்றார் ஒரு முனிவர். அவர் திருமுகத்திலே தமிழின் ஒளி இலங்கிற்று. நீலத்திரைக் கடலை அவர் நெடிது நோக்கினார். அந்திலையில் அவருள்ளம் சிந்தனையில் ஆழ்ந்தது. தண்ணொளி வாய்ந்த அவர் வண்ணத் திருமுகம் வாட்டமுற்றது: கண் கலங்கிக் கண்ணீர் பொங்கிற்று. தழுதழுத்த குரலிலே அவர் பேசத் தொடங்கினார்
"ஆம் ! குமரிக் கடலே ! உன்னைக் காணும் போது என் நெஞ்சம் குமுறுகின்றதே ! உன் காற்றால் என் உடல் கொதிக்கின்றதே ! அந்தோ ! அலை கடலே ! எங்கள் அருமைத் தமிழ்நாடு உனக்கு என்ன தீங்கு செய்தது? எங்கள் தாய்மொழியைப் போற்றி வளர்த்த பாண்டியன் உனக்கு என்ன பிழை செய்தான்? தமிழ்நாட்டு மூவேந்தருள்