அகத்தியர் தேவாரத்திரட்டு 1. குருவருள்
அகத்தியர் தேவாரத்திரட்டு - 1. குருவருள்
[தொகு]- குருவருள்
- “முத்தி விருப்பத்தை யுடைய ஒருவன், நித்தியமாகிய பேரின்பப்பெருவாழ்வை அடைய விரும்பின் முதற்கண்ணே இருவினையொப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம் என்னுமிவை வேண்டப்படுவன். படவே, இவற்றின் விளைவே பரிபக்குவமாம். இப்பக்குவம் சிவபுண்ணிய விளைவால் வரத்தக்கது. இச்சிவ புண்ணியமோ புண்ணியத் தீர்த்தங்கள் தோறும் சென்று படிந்து, தலங்கள்தோறும் சென்று, மூர்த்திகளை வழிபட்டு, உளம் கசிந்து உருகுவதால் எய்தப்பெறுவது. அவ்வாறு எய்தப்பெற்ற பக்குவான்மாவுக்கு அதுகாறும் அறிவுக்கறிவாய் உள்நின்று உணர்த்திய முழுமுதற்பொருளே ஆசாரியமூர்த்தியாய் வெளிப்பட்டு வந்து அருள்நோக்கஞ்செய்து அந்தகாரத்தை ஒருங்கே ஒழிக்கும் ஆதித்தனைப்போல, சித்தாந்த மகாவாக்கியம் என்னும் ஒப்பற்ற ஓர்மொழியை உபதேசஞ் செய்து, முத்திப்பேற்றை அடையும்படி அருள்செய்வன். அவ்வாறு அருளும் அருளே குருவருளாம். -சோ. சிவ அருணகிரி முதலியார்.
- திருச்சிற்றம்பலம்
திருஞான சம்பந்த சுவாமிகள்
[தொகு]- திருப்பிரமபுரம் (சீர்காழி)
- இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
- இறைவன் பெயர்: பிரமபுரீசர்,
- தேவியார்: திருநிலைநாயகியம்மை,
- திருத்தோணியில் வீற்றிருப்பவர்: தோணியப்பர்.
- முதல்திருமுறை -பண்- நட்டபாடை.
- குருவருள்
- திருச்சிற்றம்பலம்.
பதிகப்பாடல்: 01
[தொகு]- தோடுடைய செவியன் விடையேறி யோர்தூ வெண்மதி சூடிக்
- காடு டைய சுடலைப் பொடிபூசி என்னுள்ளங் கவர்கள்வன்
- ஏடு டைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த
- பீடு டைய பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே. (01)
- ‘தோ’ (த்+ஓ=தோ) எனத் தொடங்கியதன் நுட்பம்:
- “இந்தத் திருப்பதிகம் , பூவாரும் சீர்காழிப்பொய்கைக்கரையிலே, பிரமவித்தியா தேவியாராய உமாபிராட்டியாரது சிவஞானப்பாலை உண்டருளிய ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்த சுவாமிகளை அவர் தந்தையாரான சிவபாத விருதயர் “எச்சில் பொருந்த இப்பாலூட்டினாரைக்காட்டுக” என்று கோபித்து மாறுகொண்டோச்சியபோது, பிள்ளையார் கண்களினின்றும் நீர்பெருகத் தம்மை ஆட்கொண்டு எதிர்நிற்கும் பெருமானாகிய தோணியப்பரைத் தமது வலத்திருக்கரத்தாற் சுட்டிக்காட்டி ஓதியருளியது.
- மன்னுயிர்களின் மாதவப் பயனாய்த்தோன்றிய நம் காழிப்பிரானார் தாம் ஓதியருளிய இந்தத் திருப்பதிகத்தின் முதலடியின் முதன்மொழியின் முதலெழுத்து தோ என்று அமைத்ததின் திருவுள்ளக்கிடை பலவாயிருப்பினும் அவற்றுள் சில வருமாறு:-
- 1. வேண்டுதல் வேண்டாமை இலனாகிய பரன் தெய்வத் தமிழ்மொழியில் மிக்க இனிதாயிருத்தலினாலே, தமிழ்ச்சொற்களினாலே ஆக்கப்பட்ட தமிழ்வேதம் மிகச்சிறப்புடைத்து எனவும்,
- 2. ஐந்தெழுத்தோடு கூடியதமிழ் என்னுந் தனிமொழி அன்பருள்ளத்தை எளிதிலே உருகச்செய்து, இறைவன் திருவடிக்கண்படுத்தும் பேராற்றல் உடைத்து எனவும் விளக்க முதலில் த எனவும்,
- 3. மகா மந்திரமாகிய உயர் காயத்திரியின் அரும்பொருளாயுள்ளவர் பர்க்கன் என்னுஞ் சப்தத்துக்குரிய சூரிய மண்டல அந்தர்யாமியாகிய ’சர்வகர்மபலதாதா’ என்னும் சிவபிரான் ஆதலின், அக்காயத்திரியின் முதலெழுத்து, த எனவும்,
- 4. சகல வித்தைகளிலுஞ் சிறந்த தகரவித்தையில் உபாசிக்கப்படும் பரம்பொருள் சிவனேயாதலின், அவ்வித்தையின் முதலெழுத்து த எனவும், யாவருந் தெளிந்து உண்மையுணர்ந்து உய்யும்வண்ணம் முதற்கண் தகரத்தை எடுத்து ஓதியருளினார். (3-4) இதனால் ஆதித்தனிலும் புருடனிலும் உள்ளவன் ஒருவனே.
- பின்னர், 1. சகல சப்தமய அர்த்தமயப் பிரபஞ்சங்களுக்கும் மூலகாரணமாய்ச் சர்வமந்திர சாரபூதமாயுள்ளது ஓங்காரம் எனவும்,
- 2. ஆரியவேதம் ஆரம்பமாகும் போதே ஓம் என்று தொடங்கிச் சென்றமையால், தமிழ்வேதமும் ஆரிய வேதம்போல எத்தகையோராலும் பாராட்டப்படத்தக்கது எனவும் வற்புறுத்தும் பொருட்டுப் பிரணவத்தின் பிரதமாட்சரத்தைத் தகரத்தோடு புணர்த்தித் திருமுறையை ஆரம்பித்தனர்,
- அன்றியும், நம் காழிச்செல்வரது முதல் திருமுறையின், முதலடியின், முதன்மொழியின், முதல்எழுத்தாய இவ்வோங்காரம் பின்னர்ச் சேக்கிழார் சுவாமிகள் அருளிச்செய்த பன்னிரண்டாந்திருமுறையான திருத்தொண்டர் புராணத்தின், இறுதிச்சருக்கத்தின், இறுதிச் செய்யுளின், இறுதி அடியின், இறுதியெழுத்தாகிய மகரத்தோடு புணர்ந்து ஓம் என முடிய வேண்டியிருத்தலின், தமிழ் வேதமாகிய பன்னிருதிருமுறைகளும், பிரணவத்தில் தோன்றிப் பிரணவத்தில் ஒடுங்குமெனவும், பிரணவவாச்சியர் சிவபெருமான் எனவும் அறிவுறுத்தியவாறாயிற்று.
- அல்லாமலும், மக்களது செவியின் அமைப்பை உற்றுநோக்கிப் பண்டைத்தமிழர் ஓங்காரத்துக்கு வரிவடிவு கண்டறிந்தமையானும், தாம் இனி ஓதப்போகும் வேதவோசையைக் கவர்வது செவியேயாதலானும், ஓங்காரத்துக்கும் செவிக்கும் உள்ள ஒற்றுமையை நோக்கித் தோடுடைய செவியன் என்று திருவாய் மலர்ந்தருளினார்.
- அல்லதூஉம், சிந்தையும் மொழியுஞ் செல்லா நிலைமைத்தாய அந்தமில் இன்பத்தழிவில் வீடு எய்துதற்கு அவனருள் உபகரிப்பினல்லது அடையப் பெறாமையின், அவ்வருளே திருமேனியாகவுடைய அம்பிகையின் ஆபரணமாகிய தோட்டினை முதற்கண்ணெடுத்து வியந்தருளினார்.” -(சிவஅருணகிரி முதலியாரவர்கள் குறிப்பு)
பதிகப் பாடல்: 02
[தொகு]- முற்ற லாமையிள நாகமோ டேன முளைக்கொம் பவைபூண்டு
- வற்ற லோடுகல னாப்பலி தேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
- கற்றல் கேட்டலுடை யார்பெரி யார்கழல் கையாற் றொழுதேத்தப்
- பெற்ற மூர்ந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனனன்றே (02)
பதிகப் பாடல்: 03
[தொகு]- நீர்ப ரந்தநிமிர் புன்சடை மேலோர் நிலாவெண் மதிசூடி
- ஏர்ப ரந்தவின வெள்வளை சோரவென் னுள்ளங் கவர்கள்வன்
- ஊர்ப ரந்தவுல கின்முத லாகிய வோரூ ரிதுவென்னப்
- பேர்ப ரந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே (03)
பதிகப் பாடல்: 04
[தொகு]- வண்ம கிழ்ந்தமதி லெய்தது மன்றிவி ளங்கு தலையோட்டில்
- உண்ம கிழ்ந்துபலி தேரிய வந்தென துள்ளங் கவர்கள்வன்
- மண்ம கிழ்ந்தவர வம்மலர்க் கொன்றை மலிந்த வரைமார்பில்
- பெண்ம கிழ்ந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே. (04)
பதிகப் பாடல்: 05
[தொகு]- ஒருமை பெண்மையுடை யன்சடை யன்விடை யூரும் மிவனென்ன
- அருமை யாகவுரை செய்ய வமர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
- கருமை பெற்றகடல் கொள்ளமி தந்ததோர் காலம் மிதுவெள்ளம்
- பெருமை பெற்றபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே. (05)
பதிகப் பாடல்: 06
[தொகு]- மறைக லந்தவொலி பாடலோ டாடல ராகி மழுவேந்தி
- இறைக லந்தவின வெள்வளை சோரவென் னுள்ளங் கவர்கள்வன்
- கறைக லந்தகடி யார்பொழி னீடுயர் சோலைக் கதிர்சிந்தப்
- பிறைக லந்த பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே. (06)
பதிகப் பாடல்: 07
[தொகு]- சடைமு யங்குபுன லன்னன லன்னெரி வீசிச் சதிர்வெய்த
- உடைமு யங்குமர வோடுழி தந்தென துள்ளங் கவர்கள்வன்
- கடன்மு யங்குகழி சூழ்குளிர் கானலம் பொன்னஞ் சிறகன்னம்
- பெடைமு யங்குபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே. (07)
பதிகப் பாடல்: 08
[தொகு]- வியரி லங்குவரை யுந்திய தோள்களை வீரம் விளைவித்த
- உயரி லங்கையரை யன்வலி செற்றென துள்ளங் கவர்கள்வன்
- துயரி லங்கும்முல கிற்பல வூழிக டோன்றும் பொழுதெல்லாம்
- பெயரி லங்குபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே. (08)
பதிகப் பாடல்: 09
[தொகு]- தாணு தல்செய்திறை காணிய மாலொடு தண்டா மரையானும்
- நீணு தல்செய்தொழி யந்நிமிர்ந் தானென துள்ளங் கவர்கள்வன்
- வாணு தல்செய்மக ளீர்முத? லாகிய வையத தவரேத்தப்
- பேணு தல்செய்பிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே. (09)
பதிகப் பாடல்: 10
[தொகு]- புத்த ரோடுபொறி யில்சம ணும்புறங் கூற நெறிநில்லா
- ஒத்த சொல்லவுல கம்பலி தேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
- மத்த யானைமறு கவ்வுரி போர்த்ததோர் மாயம் மிதுவென்னப்
- பித்தர் போலும்பிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே. (10)
பதிகப் பாடல்: 11
[தொகு]- அருநெ றியமறை வல்ல முனியகன் பொய்கை யலர்மேய
- பெருநெ றியபிர மாபுர மேவிய பெம்மா னிவன்றன்னை
- ஒருநெ றியமனம் வைத்துணர் ஞானசம் பந்தன் னுரைசெய்த
- திருநெ றியதமிழ் வல்லவர் தொல்வினை தீர்த லெளிதாமே. (11)
- திருச்சிற்றம்பலம்.
திருநாவுக்கரசு சுவாமிகள்
[தொகு]:திருவதிகை வீரட்டானம்
- நான்காந் திருமுறை - பண் - கொல்லி.
- குருவருள்
- திருச்சிற்றம்பலம்
- இத்தலம் நடுநாட்டில் உள்ளது.
- இறைவன் பெயர்: வீரட்டானேசுவரர்
- தேவியார்: திருவதிகை நாயகியம்மை
- இந்தத் திருப்பதிகம் திருநாவுக்கரசர் தம்முடைய சூலைநோய் தீர ஓதி அருளியது.
பதிகப் பாடல் 01
[தொகு]- கூற்றா யினவாறு விலக்க கிலீர்கொடுமை பலசெய் தனநா னறியேன்
- ஏற்றா யடிக்கே யிரவும் பகலும் பிரியாது வணங்குவ னெப்பொழுதுந்
- தோற்றா தென்வயிற்றி னகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
- ஆற்றே னடியே னதிகைக் கெடிலவீ ரட்டானத் துறை யம்மானே. (01)
பதிகப் பாடல் 02
[தொகு]நெஞ்சம் முமக்கே யிடமா கவைத்தேன் நினையா தொருபோ துமிருந் தறியேன்
வஞ்சம் மிதுவொப் பதுகண் டறியேன் வயிற்றோ டுதுடக் கிமுடக் கியிட
நஞ்சா கிவந்தென் னைநலி வதனை நணுகா மற்றுரந் துகரந் துமிடீர்
அஞ்சே லுமென்னீ ரதிகைக் கெடில வீரட் டானத் துறையம் மானே.
- நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாது ஒரு போதும் இருந்து அறியேன்
- வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கி இட
- நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
- அஞ்சேலும் என்னீர் அதிகைக் கெடில வீரட்டானது உறை அம்மானே.
பதிகப் பாடல் 03
[தொகு]- பணிந்தா ரனபா வங்கள்பாற் றவல்லீர் படுவெண் டலையிற் பலிகொண் டுழல்வீர்
- துணிந்தே யுமக்காட் செய்துவா ழலுற்றால் சுடுகின் றதுசூ லைதவிர்த் தருளீர்
- பிணிந்தார் பொடிகொண் டுமெய்பூ சவல்லீர் பெற்றமேற் றுகந்தீர் சுற்றும்வெண் டலைகொண்
- டணிந்தீ ரடிகே ளதிகைக் கெடில வீரட் டானத் துறையம்மானே. (௩)
- பணிந்தார் அன பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர்
- துணிந்தே உமக்கு ஆட் செய்து வாழல் உற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்
- பிணிந்தார் பொடி கொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெள் தலை கொண்டு
- அணிந்தீர் அடிகேள் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே.(௩)
பதிகப் பாடல் 04
[தொகு]- முன்னம் மடியே னறியா மையினால் முனிந்தென் னைநலிந் துமுடக் கியிடப்
- பின்னை யடியே னுமக்கா ளும்பட்டேன் சுடுகின் றதுசூ லைதவிர்த் தருளீர்
- தன்னை யடைந்தார் வினைதீர்ப் பதன்றோ தலையா யவர்தங் கடனா வதுதான்
- அன்ன நடையா ரதிகைக் கெடில வீரட் டானத் துறையம் மானே. (௪)
- முன்னம் அடியேன் அறியாமையினால் முனிந்து என்னை நலிந்து முடக்கி இடப்
- பின்னை அடியேன் உமக்கு ஆளும் பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர்
- தன்னை அடைந்தார் வினை தீர்ப்பது அன்றோ தலை ஆயவர் தம் கடன் ஆவதுதான்
- அன்ன நடையார் அதிகைக் கெடில வீரட்டானத்து உறையும் அம்மானே. (௪)
பதிகப் பாடல் 05
[தொகு]- காத்தாள் பவர்கா வலிகழ்ந் தமையால் கரைநின் றவர்கண் டுகொளென்று சொல்லி
- நீத்தா யகயம் புகநூக் கியிட நிலைக்கொள் ளும்வழித் துறையொன் றறியேன்
- வார்த்தை யிதுவொப் பதுகேட் டறியேன் வயிற்றோ டுதுடக் கிமுடக் கியிட
- ஆர்த்தார் புனலா ரதிகைக் கெடில வீரட் டானத் துறையம் மானே. (௫)
- காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டு கொள் என்று சொல்லி
- நீத்தாய கயம் புக நூக்கி இட நிலைக் கொள்ளும் வழித் துறை ஒன்று அறியேன்
- வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கி இட
- ஆர்த்தார் புனலார் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே. (௫)
பதிகப் பாடல் 06
[தொகு]- சலம்பூ வொடுதூ பமறந் தறியேன் தமிழோ டிசைபா டன்மறந் தறியேன்
- நலந்தீங் கிலுமுன் னைமறந் தறியேன் உன்னா மமென்னா வின்மறந் தறியேன்
- உலந்தார் தலையிற் பலிகொண் டுழல்வாய் உடலுள் ளுறுசூ லைதவிர்த் தருளாய்
- அலந்தே னடியே னதிகைக் கெடில வீரட் டானத் துறையம் மானே. (௬)
- சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்
- நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவின் மறந்து அறியேன்
- உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடல் உள் உறு சூலை தவிர்த்து அருளாய்
- அலந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே. (௬)
பதிகப் பாடல் 07
[தொகு]- உயர்ந்தேன் மனைவாழ்க் கையுமொண் பொருளும் ஒருவர் தலைகா வலிலா மையினால்
- வயந்தே யுமக்காட் செய்துவா ழலுற்றால் வலிக்கின் றதுசூ லைதவிர்த் தருளீர்
- பயந்தே யென்வயிற் றினகம் படியே பறித்துப் புரட்டி யறுத்தீர்த் திடநான்
- அயர்ந்தே னடியே னதிகைக் கெடில வீரட் டானத் துறையம் மானே. (௭)
- உயர்ந்தேன் மனை வாழ்க்கையும் ஒண் பொருளும் ஒருவர் தலை காவல் இலாமையினால்
- வயந்தே உமக்கு ஆட் செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர்
- பயந்தே என் வயிற்றின் அகம் படியே பறித்துப் புரட்டி அறுத்து ஈர்த்திட நான்
- அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே. (7)
பதிகப் பாடல் 08
[தொகு]- வலித்தேன் மனைவாழ்க் கைமகிழ்ந் தடியேன் வஞ்சம் மனமொன் றுமிலா மையினால்
- சலித்தா லொருவர் துணையா ருமில்லைச் சங்கவெண் குழைக்கா துடையெம் பெருமான்
- கலித்தே யென்வயிற் றினகம் படியே கலக்கி மலக்கிட் டுக்கவர்ந் துதின்ன
- அலுத்தே னடியே னதிகைக் கெடில வீரட்டானத் துறையம் மானே. (௮)
- வலித்தேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன் வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால்
- சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லைச் சங்க வெண் குழைக் காது உடை எம் பெருமான்
- கலித்தே என் வயிற்றின் அகம் படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்து தின்ன
- அலுத்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே. (8)
பதிகப் பாடல் 09
[தொகு]- பொன்போ லமிளிர் வதோர்மே னியினீர் புரிபுன் சடையீர் மெலியும் பிறையீர்
- துன்பே கவலை பிணியென் றிவற்றை நணுகா மற்றுரந் துகரந் துமிடீர்
- என்போ லிகளும் மையினித் தெளியார் அடியார் படுவ திதுவே யாகில்
- அன்பே யமையும் மதிகைக் கெடில வீரட் டானத் துறையம் மானே. (௯)
- பொன் போல மிளிர்வது ஓர் மேனியினீர் புரி புன் சடையீர் மெலியும் பிறையீர்
- துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்தும் இடீர்
- என் போலிகள் உம்மை இனித் தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில்
- அன்பே அமையும் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே. (9)
பதிகப் பாடல் 10
[தொகு]- போர்த்தா யங்கொரா னையினீ ருரிதோல் புறங்கா டரங்கா நடமா டவல்லாய்
- ஆர்த்தா னரக்கன் றனைமால் வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய் தவது கருதாய்
- வேர்த்தும் புரண்டும் விழுந்தும் மெழுந்தால் என்வே தனையா னவிலக் கியிடாய்
- ஆர்த்தார் புனல்சூ ழதிகைக் கெடில வீரட் டானத் துறையம் மானே. (௰)
- போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறம் காடு அரங்கா நடம் ஆட வல்லாய்
- ஆர்த்தான் அரக்கன் தனை மால் வரைக் கீழ் அடர்த்திட்டு அருள் செய்த அது கருதாய்
- வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனையான விலக்கி இடாய்
- ஆர்த்தார் புனல் சூழ் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே. (10)
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
[தொகு]- திருவெண்ணெய் நல்லூர்
- ஏழாந் திருமுறை - பண் - இந்தளம்
- குருவருள்
- திருச்சிற்றம்பலம்
- இத்தலம் நடுநாட்டில் உள்ளது.
- இறைவன் பெயர்: கிருபாபுரீசுவரர்
- தேவியார்: வேற்கண் நாயகியம்மை
- இந்தத் திருப்பதிகம், திருமணக்காலத்தில் தடுத்தாட்கொண்டபோது ஓதி அருளியது.
பதிகப் பாடல் 01
[தொகு]பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாவுனக் காளாயினி யல்லேனென லாமே. (௧)
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென் பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே. (01)
பதிகப் பாடல் 02
[தொகு]நாயேன்பல நாளுநினைப் பின்றிமனத் துன்னைப்
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெற லாகாவருள் பெற்றேன்
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆயாவுனக் காளாயினி யல்லேனென லாமே. (௨)
- நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னைப்
- பேயாய்த் திரிந்து எய்த்தேன் பெறல் ஆகா அருள் பெற்றேன்
- வேய் ஆர் பெண்ணைத் தென் பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
- ஆய்ஆ உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே. (02)
பதிகப் பாடல் 03
[தொகு]மன்னேமற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னைப்
பொன்னேமணி தானேவயி ரம்மேபொரு துந்தி
மின்னார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அன்னேயுனக் காளாயினி யல்லேனென லாமே. (௩)
- மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னைப்
- பொன்னே மணி தானே வயிரம்மே பொருது உந்தி
- மின் ஆர் பெண்ணைத் தென் பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
- அன்னே உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே. (03)
பதிகப் பாடல் 04
[தொகு]முடியேனினிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்ற மூர்தீ
கொடியேன்பல பொய்யேயுரைப் பேனைக்குறிக் கொண்ணீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அடிகேளுனக் காளாயினி யல்லேனென லாமே. (௪)
- முடியேன் இனிப் பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ
- கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள் நீ
- செடி ஆர் பெண்ணைத் தென் பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
- அடிகேள் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே. (04)
பதிகப் பாடல் 05
[தொகு]பாதம்பணி வார்கள் பெறுபண்டம்மது பணியாய்
ஆதன்பொரு ளானேனறி வில்லேனரு ளாளா
தாதார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆதீயுனக் காளாயினி யல்லேனென லாமே. (௫)
- பாதம் பணிவார்கள் பெறு பண்டம் அது பணியாய்
- ஆதன் பொருள் ஆனேன் அறிவில்லேன் அருளாளா
- தாது ஆர் பெண்ணைத் தென் பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
- ஆதீ உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே. (05)
பதிகப் பாடல் 06
[தொகு]தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனி
எண்ணார்புர மூன்றுமெரி யுண்ணநகை செய்தாய்
மண்ணார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அண்ணாவுனக் காளாயினி யல்லேனென லாமே. (௬)
- தண் ஆர் மதி சூடீ தழல் போலும் திரு மேனி
- எண்ணார் புரம் மூன்றும் எரி உண்ண நகை செய்தாய்
- மண் ஆர் பெண்ணைத் தென் பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
- அண்ணா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே. (06)
பதிகப் பாடல் 07
[தொகு]ஊனாயுயி ரானாயுட லானாயுல கானாய்
வானாய்நில னானாய்கட லானாய்மலை யானாய்
தேனார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆனாயுனக் காளாயினி யல்லேனென லாமே. (௭)
- ஊன் ஆய் உயிர் ஆனாய் உடல் ஆனாய் உலகு ஆனாய்
- வானாய் நிலன் ஆனாய் கடல் ஆனாய் மலை ஆனாய்
- தேன் ஆர் பெண்ணைத் தென் பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
- ஆனாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே. (07)
பதிகப் பாடல் 08
[தொகு]ஏற்றார்புர மூன்றுமெரி யுண்ணச்சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லித்திரி வேனோசெக்கர் வானீர்
ஏற்றாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆற்றாயுனக் காளாயினி யல்லேனென லாமே. (௮)
- ஏற்றார் புரம் மூன்றும் எரி உண்ணச் சிலை தொட்டாய்
- தேற்றாதன சொல்லித் திரிவேனோ செக்கர் வானீர்
- ஏற்றாய் பெண்ணைத் தென் பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
- ஆற்றாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே. (08)
பதிகப் பாடல் 09
[தொகு]மழுவாள்வல னேந்தீமறை யோதீமங்கை பங்கா
தொழுவா ரவர்துயராயின தீர்த்தலுன தொழிலே
செழுவார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அழகாவுனக் காளாயினி யல்லேனென லாமே. (௯)
- மழு வாள் வலன் ஏந்தீ மறை ஓதீ மங்கை பங்கா
- தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே
- செழு வார் பெண்ணைத் தென் பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
- அழகா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே. (09)
பதிகப் பாடல் 10
[தொகு]காரூர்புன லெய்திக்கரை கல்லித்திரைக் கையால்
பாரூர்புக ழெய்தித்திகழ் பன்மாமணி யுந்திச்
சீரூர்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
ஆரூரனெம் பெருமாற்கா ளல்லேனென லாமே. (௰)
- கார் ஊர் புனல் எய்திக் கரை கல்லித் திரைக் கையால்
- பார் ஊர் புகழ் எய்தித் திகழ் பல் மா மணி உந்திச்
- சீர் ஊர் பெண்ணைத் தென் பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
- ஆரூரன் எம் பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே. (10)
- பார்க்க
அகத்தியர் தேவாரத்திரட்டு 2. பரையின் வரலாறு
அகத்தியர் தேவாரத்திரட்டு 3. அஞ்செழுத்துண்மை
அகத்தியர் தேவாரத்திரட்டு 4. கோயிற்றிறம்
அகத்தியர் தேவாரத்திரட்டு 5. சிவனுருவம்
அகத்தியர் தேவாரத்திரட்டு 6. திருவடி
அகத்தியர் தேவாரத்திரட்டு 7. அருச்சனை
அகத்தியர் தேவாரத்திரட்டு 8. அடிமை
இதனைத் தெரிவிக்கும் பாடல்
- (நேரிசை வெண்பா)
- குருவருளும் வெண்ணீ றெழுத்தஞ்சும் கோயில்
- அரனுருவு மென்றலைமே லாக்கும் - திருவடியும்
- சிட்டான வர்ச்சனையுந் தொண்டுஞ் சிவாலயர்க்கென்(று)
- இட்டார் அகத்தியனார் எட்டு.