அகத்தியர் தேவாரத்திரட்டு 3. அஞ்செழுத்துண்மை

விக்கிமூலம் இலிருந்து

அகத்தியர் தேவாரத்திரட்டு 3.அஞ்செழுத்து உண்மை[தொகு]

“மூன்றாவது அஞ்செழுத்துண்மை: அவ்வாறு பரை வியாபகத்தில் அழுந்திப் பூரணநிட்டை கூடியிருக்கும் நிலையில் பண்டைப் பயிற்சி வசத்தால், பிரபஞ்சவாசனைபற்றிச் சலிப்பு உண்டாமாயின், அச்சலிப்பு நீங்கி அந்நிலை தலைகூடுதற் பொருட்டு ‘சிறீ பஞ்சாட்சர’த்தை உச்சரிக்கவேண்டியிருத்தலின் அதனை ஓது முறையிலோதி, உணருமுறையில் உணர்ந்து, நிற்குமுறையில் நின்று ‘சிவோகம் பாவனை’ பண்ணும் அநுபூதிநிலையே அஞ்செழுத்துண்மையாம்.” -சோ. சிவ அருணகிரி முதலியார்.
இந்தத் திருப்பதிகம், உபநயனச் சடங்கு இயற்றிய காலத்தே, சிஷ்யபரம்பரையாய் ஓதி உணரவரும் வேதங்களை நுமக்குத் தந்தோம் என்று சுவஸ்திவாசக மந்திரங்களை உரைத்த அந்தணர்க்கு ஆளுடைய பிள்ளையார், வேத மந்திர ரகசியப் பொருளை எல்லாம் உபதேசித்து அவர் ஐயங்களை நீக்கியதோடு, இம்மந்திரங்களெல்லாம் உதித்தற்குக் காரணமாயுள்ளது ஸ்ரீ பஞ்சாட்சரமே என அதன் பெருமையினையுந் தெரித்தருளியது.
பதிகப் பாடல் 01[தொகு]
துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினைமி னாடொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்ச வுதைத்தன வஞ்செ ழுத்துமே. (௧)
துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சு அகம் நைந்து நினைமின் நாள் தொறும்
வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்சு எழுத்துமே. (01)
பதிகப் பாடல் 02[தொகு]
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையு ணின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுண் மந்திர மஞ்செ ழுத்துமே. (௨)
மந்திரம் நான் மறை ஆகி வானவர்
சிந்தையுள் நின்று அவர் தம்மை ஆள்வன
செம் தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே. (௨)
பதிகப் பாடல் 03[தொகு]
ஊனி லுயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யெற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன வஞ்செ ழுத்துமே. (௩)
ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒள் சுடர்
ஞான விளக்கினை ஏற்றி நன் புலம்
தேனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர்
ஆன கெடுப்பன அஞ்சு எழுத்துமே. (03)
பதிகப் பாடல் 04[தொகு]
நல்லவர் தீயரெ னாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்
தல்லல் கெடுப்பன வஞ்செ ழுத்துமே. (௪)
நல்லவர் தீயர் எனாது நச்சினர்
செல்லல் கெடச் சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன் தமர் கொண்டு போம் இடத்து
அல்லல் கெடுப்பன அஞ்சு எழுத்துமே. (04)



பதிகப் பாடல் 05[தொகு]
கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமு மஞ்ச வைம்பொழில்
தங்கர வின்பட மஞ்சுந் தம்முடை
அங்கையி லைவிர லஞ்செ ழுத்துமே. (௫)
கொங்கு அலர் வல் மதன் வாளி ஐந்து அகத்து
அங்கு உள பூதமும் அஞ்ச ஐம் பொழில்
தங்கு அரவின் படம் அஞ்சும் தம் உடை
அம் கையில் ஐ விரல் அஞ்சு எழுத்துமே. (05)
பதிகப் பாடல் 06[தொகு]
தும்ம லிரும றொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை யஞ்செ ழுத்துமே. (06)
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும்
அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே. (06)
பதிகப் பாடல் 07[தொகு]
வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி யுகப்பன வஞ்செ ழுத்துமே. (௭)
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாள் தொறும்
மாடு கொடுப்பன மன்னு மா நடம்
ஆடி உகப்பன அஞ்சு எழுத்துமே. (07)
பதிகப் பாடல் 08[தொகு]
வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை யிராவணன் பாடி யுய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்ட மளிப்பன வஞ்செ ழுத்துமே. (௮)
வண்டு அமர் ஓதி மடந்தை பேணின
பண்டை இராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின் அவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே. (08)
பதிகப் பாடல் 09[தொகு]
கார்வண னான்முகன் காணுதற் கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வண மாவன வஞ்செ ழுத்துமே. (௯)
கார் வணன் நான் முகன் காணுதற்கு ஒணாச்
சீர் வணச் சேவடி செவ்வி நாள் தொறும்
பேர் வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர் வணம் ஆவன அஞ்சு எழுத்துமே. (09)
பதிகப் பாடல் 10[தொகு]
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்க டெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகை
கத்திர மாவன வஞ்செ ழுத்துமே. (௰)
புத்தர் சமண் கழுக்கையர் பொய் கொளாச்
சித்தத்தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு
அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே. (10)
பதிகப் பாடல் 11[தொகு]
நற்றமிழ் ஞானசம் பந்த னான்மறை
கற்றவன் காழியர் மன்ன னுன்னிய
அற்றமின் மாலையீ ரைந்து மஞ்செழுத்
துற்றன வல்லவ ரும்ப ராவரே. (௧௧)
நல் தமிழ் ஞான சம்பந்தன் நால் மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றம் இல் மாலை ஈர் ஐந்தும் அஞ்சு எழுத்து
உற்றன வல்லவர் உம்பர் ஆவர் ஏ. (11)
பார்க்க

அகத்தியர் தேவாரத்திரட்டு 1. குருவருள்

அகத்தியர் தேவாரத்திரட்டு 2. பரையின் வரலாறு

அகத்தியர் தேவாரத்திரட்டு 4. கோயிற்றிறம்

அகத்தியர் தேவாரத்திரட்டு 5. சிவனுருவம்

அகத்தியர் தேவாரத்திரட்டு 6. திருவடி

அகத்தியர் தேவாரத்திரட்டு 7. அருச்சனை

அகத்தியர் தேவாரத்திரட்டு 8. அடிமை

அகத்தியர் தேவாரத்திரட்டு

இதனைத் தெரிவிக்கும் பாடல்

(நேரிசை வெண்பா)
குருவருளும் வெண்ணீ றெழுத்தஞ்சும் கோயில்
அரனுருவு மென்றலைமே லாக்கும் - திருவடியும்
சிட்டான வர்ச்சனையுந் தொண்டுஞ் சிவாலயர்க்கென்(று)
இட்டார் அகத்தியனார் எட்டு.