பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



XI

                      

ச.தண்டபாணி தேசிகரால் பழந்தமிழ்ச் சொல்லாட்சித் திறனும் ஊட்டி வளர்க்கப்பட்ட நான், இவையெல்லாம் ஒருங்கிணைந்த நிலையில் எனது தமிழ்ப் பணியமைய எல்லா வகையிலும் ஊக்குவிக்கும் பேருக்கியாக என்னுள் கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாக விசையென என் உள்ளத்தளவில் இயக்கி வருபவர் தமிழினக் காவலர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். தமிழகப் பொற்காலச் சிற்பியான டாக்டர் கலைஞர் அவர்கள் நான் 1986இல் எழுதிய காலம் தேடும் தமிழ்' நூல் வெளியீட்டு விழாவில் " அறிவியல் தமிழ்ச் சிற்பி" எனப் பட்டமளித்து என்னைப் பாராட்டிய போது கூறிய சொற்கள் ஒவ்வொன்றும் என் எதிர்காலத் தமிழ்ப் பணிக்குரிய வழியைக் காட்டுவதாக அமைந்ததோடு தமிழகத்துக்கு என்னை உரிய முறையில் இனங்காட்டுவதாகவும் அமைந்தது. அதன் பின்னர் தமிழ் உள்ளங்கள் பலவும் என்னிடமிருந்து பலவகையான எதிர்பார்ப்புகளை எதிர்நோக்கவும் செய்தன.

டாக்டர் கலைஞர் அவர்கள் 1989இல் ஆட்சிப் பொறுப் பேற்றவுடன் எனக்கு "திரு வி.க " விருதளித்துப் பரிசும் தந்ததோடு நேரிடையாகவும் மறைமுகமாகவும் என் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கான முயற்சிகளை ஊக்கியும் வந்தார். இவையெல்லாம் எனக்குப் பெரும் வேகமூட்டிகளாயின என்பதில் ஐயமில்லை. அண்மையில் ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் 'எம்.ஜி ஆர்' விருது பெற்றதற்கும் அவர்களே அடித்தளக் காரணம் என்பதை அறிந்தபோது பெருமகிழ்வடைந்தேன். வரலாற்று நாயகராக, பொற்காலச் சிற்பியாகத் திகழும் டாக்டர் கலைஞர் அவர்களின் உள்ளத்தில் எனக்கொரு சிறப்பிடம் கிடைத்துள்ளதை வாழ்க்கையில் நான் பெற்ற பெரும் பேறாகக் கருதி மகிழ்கிறேன்.

மீண்டும் கலைஞர் ஆட்சி மலர்ந்தவுடனேயே தமிழ் வளர்ச் கிக்கெனத் தமிழாய்ந்த தமிழ்க்குடிமகனாரை அமைச்சராக்கியதோடு, அடுத்த ஆண்டு முதல் பொறியியல், மருத்துவஞ்சார் தொழில் (paramedical) மற்றும் மருத்துவப் படிப்புகளில் சில பிரிவுகள் தமிழில் கற்பிக்கப்படும் என அறிவிப்புச் செய்துள்ளது என் போன்றவர்களைப் பேருவகை கொள்ளச் செய்தன. மருத்துவப் பாட நூல்கள் தமிழில் எழுதும் போது நூலாசிரியர்கட்கு ஏற்படும் கலைச் சொல் முட்டுப்பாட்டை நீக்கும் வழியாக உடனடியாக முதல் தொகுதியை வெளியிட விழைந்ததன் விளைவே இந்நூல் வெளியீடு. இதைத் தொடர்ந்து இரண்டாவது தொகுதியை மேற்கொண்டுள்ளேன்.