பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

அவர் பெயராலோ, அவர் சூட்ட நேரிட்ட பெயராலோ அவை வழங்குவது தமிழ் ஆக்கத்திற்குத் தடையல்ல. பொருளின் பெயர்-மருந்துப் பெயர் பலவும் பெயர்ச் சொற்களேயாவதால் அதே பெயர் தமிழிலும் பயன்படுத்தப்படுவது தவறல்ல. ஆனால் அவற்றை எவரும் எதுவெனத் தெளிவதற்கான விளக்கம் தமிழில் தரப்படுவதே தமிழுக்கு ஆற்றவேண்டிய அறிவியல் ஆக்கப்பணியாகும். அந்த அரிய பணியைத் திறம்படவும் தெளிவுடையதாகவும் ஆற்றியுள்ளார் திரு மணவை முஸ்தபா.

தமிழ் மண்ணில் தொன்னாளிலேயே வளர்ந்து, பயன் பட்டு அண்மைக் காலத்தில் தொய்வடைய நேரிட்டுள்ளது சித்தமருததுவம். அந்த மருத்துவ முறையையும் மருத்து செய்முறைகளையும் விளக்கி எழுந்த செய்யுள் ஏடுகள் பல. அவர்கள் உடற்கூற்றினையும் அதன் இயக்கத்தையும், உள் உறுப்புகளையும் குறித்து அறிந்து பெயரிட்டு வழங்கியுள்ளனர். ஆங்கிலத்தில் இடம்பெற்ற மருத்துவக் கலைச் சொற்கள் பலவற்றிற்கு ஈடான தமிழ்ச் சொற்களை நாம் அவற்றுள் கண்டறியலாகும். சித்த மருத்துவச் சொற்கள் பலவும், சில நோய்களின் பெயர்களும் முன்னரே கைக்கொள்ளப் பட்டுள்ளன. அந்த வகை முயற்சியில் சித்தமருத்துவக் கல்வியில் பட்டம் பெற்றவர்கள் ஈடுபடவும், அம்முயற்சியால் மருத்துவ அறிவியல் தழைக்சவும் இந்தக் களஞ்சியம் ஏற்றதொரு துணையாகும். மேலும் 'மருத்துவம், வேதியியல், தாவர இயல் தொடர்புடைய அறிவியல்' என்னும் பெயருடன் அறிவியல்' தமிழ்ச் சொற்களுக்குத் தமிழிலும் ஆங்கி லத்திலும் விளக்கம் தரும் பேரகராதி ஒன்றினை, அறிவாற்றலில் சிறந்த டி. வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் அரை நூற்றாண்டுக்கு முன்னரே தன் தனி முயற்சியால் உருவாக்கியுள்ளதை அறிந்தவர் எவரும் நன்றியுடன் போற்றத் தவறார், சித்த மருத்துவ நூற்களிலும் தமிழ் வழக்கிலும் இடம்பெற்ற பெயர்களாக அந்த அகரவரிசையில் காணப்படும சொற்கள் பலவும், இப்படிப்பட்ட மருத்துவக் களஞ்சியப் பணி விரிவுக்குப் பெரிதுப் பயன்படும் என்று கருதுகிறேன்.

அலோபதி மருத்துவப் பட்டப்படிப்பும் தமிழில் பயிற்று விக்கப்பட வேண்டும் என்று விரும்புவதற்கான நியாயங்கள் வளர்ந்துள்ள இக்காலத்தில் தேர்ந்த மருத்துவ அறிவாற்றலைத் தமிழில் பெறமுடியுமா? என்னும் கேள்வி எழுப்பும் இளைஞர் உலகம் தெளிவடைந்து தன்னம்பிக்கை கொள்வதற்கும் இந்தக் களஞ்சியம் வழிசெய்யும் என்பதில் ஐயமில்லை.