மனம் வெளுக்க... 17
அவரைப் பார்த்துப் பேச வந்த அருணாசலம், வீட்டு நிலவரத்தை அறிந்து, சிவசிதம்பரத்துக்காக அனுதாபப்பட்டார்.
... பெண்ணுக்குக் கல்யாணம் முடிந்ததும் ஒரு பிரச்சினை தீர்ந்ததுன்னு சொன்ணீங்க... சமூக நிலைமை அப்படி இல்லை. பெண்ணுக்குக் கல்யாணம் ஆவதற்கு முன்னாலும் ஏகப்பட்ட பிரச்சினைகளை பெற்றோர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கு. கல்யாணத்துக்குப் பிறகும் பல பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதாகிறது. உண்மையில், ஒரு பெண்ணின் கல்யாணம் அவள் வாழ்க்கையில் புதிய புதிய பிரச்சினைகள் புகுவதற்கு வழிசெய்யும் வாசலாகத்தான் இருக்கிறது" என்றார் நண்பர்.
"பெரிய படிப்பு படிச்சவன், பணம் - சொத்து - பெரிய வேலை எல்லாம் உடையவன் நம்ம நிலைமைக்குச் சரிப்பட மாட்டான். சாதாரனப் படிப்பும், சுமாரான வேலையும், மத்தியதர நிலையும் உள்ள ஒருவன் தனக்கு மனைவியாக வருகிறவளை நல்லபடியாகக் கவனித்துக் கொள்வான். கண்கலங்கும்படி செய்ய மாட்டான்’னு எண்ணினேன். அவனும் மோசமாகத்தான் நடந்துகொள்கிறான்' என்று சிவசிதம்பரம் குறைப்பட்டுக் கொண்டார்.
"ஆண்மனம் என்பதுதான் இதுக்கெல்லாம் அடிப்படை. "ஆண்" என்ற எண்ணமே சமூகத்தில் பெரும்பாலருக்கு ஒரு திமிரை, கர்வத்தை, பேராசையை, பெண்ணை அடக்கி ஆளும் விருப்பத்தை, மனைவியை அடிமை போல் கருதும் போக்கை எல்லாம் தந்து கொண்டிருக்கிறது. பெண்ணை வாழ்க்கைத் துணையாக மதிக்கும் பண்பைவிட, பெண்ணைக் கொண்டு தனது அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் - வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் - தனது சுகசவுகரியங்களையும் பலவிதமான தேவைகளையும் பூர்த்தி பண்ண வேண்டும் என்ற நினைப்பும் நடப்புமே ஆண்களிடம் காணப்படுகிறது. இந்த நிலைமை மாறினால்தான் பெண் சமூகத்தில் நல்வாழ்வு பெற முடியும். அதற்கு ஆண்களின் மனம் புனிதமுற வேண்டும். அப்படி மனம் வெளுப்பதற்கு மருந்தோ, மார்க்கமோ ஏதாவது உண்டோ?” என்றார் அருணாசலம். அவர் ஒரு மாதிரியான நபர் என்பது மற்றவர்களின் எண்ணம்,
அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிவ சிதம்பரத்தின் உள்ளத்து அனல், நெடுமூச்சாக வெளிப்பட்டது.
(இதயம் பேசுகிறது, 1981)