பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகத்தினரிடமும் பழக்கம் வைத்திருந்தார். அண்ணன் கோமதி நாயகத்தை அவ்வப்போது அவர் தம்முடன் அழைத்துச் செல்வதும் உண்டு. ஒருமுறை அவர் சொன்னார், சிறந்த காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் சோமயாஜலு இப்போது சங்கரன் கோயிலில் தங்கியிருக்கிறார். ஒரு நாள் அவரைப் பார்க்கப் போவோம் என்று. அவ்வாறே ஒருநாள் அண்ணன் கோமதிநாயகத்துடன் அவர் சங்கரன்கோயில் போய் திரும்பினார். திரும்பிவந்த போது அண்ணன் ஏகப்பட்ட பத்திரிகைகள் கொண்டு வந்தார். இவையெல்லாம் நமக்குத் தான். சோமயாஜலு கொடுத்தார் என்று மகிழ்ச்சியோடு சொன்னார். காரைக்குடியிலிருந்து வெளிவந்த ஊழியன் இதழ்ப் பிரதிகளே அதிகம் இருந்தன. புதுச்சேரியில் கவிஞர் பாரதிதாசன் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய சுப்பிரமணிய பாரதியார் கவிதாமண்டலம் எனும் கவிதை ஏடு வ.வெ.சு. ஐயர் நடத்திய பால பாரதி, காஞ்சிபுரத்தில் மாசிலாமணி முதலியார் நடத்திய தமிழரசு ஆகிய பத்திரிகைகளின் சிற்சில இதழ்கள் கிடைத்திருந்தன. நல்ல விருந்தாகக் கிட்டியிருந்தன அவை, 'ஊழியன் பல்சுவை வாரஇதழ். சமூக, அரசியல் பிரச்சினைகள், சர்வதேசநகரங்கள் பற்றிய கட்டுரைகள் மற்றும் கதைகள், தொடர்கதை எல்லாம் அதில் இடம்பெற்றிருந்தன. பத்திரிகையின் ஆசிரியர் ராய சொக்கலிங்கம். அவர் இலக்கியக் கட்டுரைகளும் எழுதினார். துணை ஆசிரியர் இ. சிவம் தான் தொடர்கதை எழுதி வந்தார். அவர் ரசமான சிறுகதைகளும் எழுதினார். புதுமைப்பித்தன் ஆரம்பநாள்களில் வேலைதேடி சென்னைக்குச் சென்று மணிக்கொடி அலுவலகத்தில் தங்கியிருந்தார். மூத்த எழுத்தாளர் வ.ரா. (வ. ராமஸ்வாமி) அவரை ஊழியன் இதழில் பணிபுரிவதற்காக காரைக்குடிக்கு அனுப்பி வைத்தார். ஆனால், புதுமைப்பித்தன் அங்கு நீடித்து இருக்கவில்லை. சில வாரங்களிலேயே சென்னை திரும்பி விட்டார். வ.ரா. காரணம் கேட்டபோது, எனக்கு அங்கே ஒத்து வரவில்லை. ஈ. சிவம் எறும்பு சிவமாக அரித்துப்பிடுங்கிவிட்டார் என்று தெரிவித்தார். இந்த சுவாரசியமான குறிப்பு தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாறு நூலில் இடம்பெற்றிருக்கிறது. 178 : வல்லிக்கண்ணன்