பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

ஒரு நாடகத்தின் போது அவள் காட்சிதந்தாள். நடிப்பவளாக அல்ல. நாடகம் காணவந்த ஒரு உல்லாசியின் நெருக்கத் தோழியாக.

வேகமாக மோட்டார் சைக்கிளில் சவாரி போன ஒரு டம்பப் பேர்வழியின் பின்னால், அவனை கட்டிப்பிடித்தபடி அமர்ந்து, அவன் தோள் மீது தலை சாய்த்து, சிரிக்கும் முகத்தோடு, சிரிக்கச் சிரிக்கப் பேசியவளாக.

நாகரிக ஒட்டல் ஒன்றில், செல்வச் செழிப்போடு விளங்கிய ஒரு தடியனோடு, ஒரு ஜாங்கிரியைப் பிட்டு ஒரு துண்டை அவன் வாயில் அவள் கொடுப்பதும், ஒரு துண்டை அவன் அவளுக்கு ஊட்டுவதும், அவன் விரலை அவள் உதடுகளால் கவ்வி பொய்யாய் கடிப்பதும், அவன் விரலை எடுத்து வலியால் தவிப்பவன் போல் நடிப்பதும், அவள் சிரித்துக் குலுங்குவது மான நிலையில், .

இப்படிப் பல.

அவளை அவன் இனம் புரிந்து கொண்டான். காலமும் பனமும் பசியும் மனமும் துணிவும் கொண்ட வசதிக்காரர்களுக்கு துணைசேரத் தயங்காத சாகசக்காரி, அவர்களை சந்தோஷப்படுத்தி தனது தேவைகளையும் வசதிகளையும் பூர்த்தி செய்து கொள்ளத் துணிந்த நவநாகரிகத் தொழிற்காரி இவள்.

சீ என்றாகி விட்டது சந்திரனுக்கு.

வெட்கம் கெட்ட - தன்மானம் இல்லாத - இந்த சுந்தரிக்கு இவ் இனிய, அழகிய, கவிதை வடிவ - களங்கமற்ற மலர் போன்ற - முகம் ஏன் வந்தது? சுலபத்தில் பிறரை மயக்கவா, வசீகரிக்கவா, ஏய்க்கவா? தன் எண்ணங்களை எளிதில் நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியான சாதனம் தானா அந்த முகம்?

இப்பவும், விடைகாண முடியாத பல கேள்விகளை வளர்த்துக் குழம்பினான் சந்திரன். அவன் மனசில் அந்த முகம் - ஆதியில் என்றோ எங்கோ வசிய ஒளியோடு மிளிர்ந்து, அவன் உள்ளத்தில் நிலையாகப் பதிந்து விட்ட அந்த முகம் - எப்பவும் அவனை அலைக்கழிக்கும் ஒரு பிம்பமாகத்தான் மிதந்து கொண்டிருந்தது. -

(பயணம், 1984)