உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சகுந்தலா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

சகுந்தலா


 காலத்து மனுஷங்களைப் பாருங்க,நீ யாரு,எந்த ஊரு,எங்கே போறே,என்ன வேலை,வயசென்ன, சம்பாத்தியம் எவ்வளவு,கல்யாணம் ஆகிவிட்டதா, பிள்ளைகள் எத்தனை—இப்படி ஒவ்வொருவரைப் பற்றிய சகல விவரங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று துடிப்பார்கள். தூண்டித் தொளைத்துக் கேள்வி மேல் கேள்வி போட்டு, பிராணனை வாங்கிவிடுவார்கள்.'

  ஸ்ரீமான் ஞானசம்பந்தம் பெரிய மனுஷத்தனம் செய்யப் பின் வாங்காதவர் என்று நிச்சயமாகப் பட்டது ரகுராமனுக்கு. தேவை யிருக்கிறதோ இல்லையோ, சம்பந்தம் உண்டோ இல்லையோ, சதா எதையாவது பொரிந்து தள்ள வேண்டியது தங்கள் தொழில் எனக்கொண்டு விடுகிறவர்கள் அவர்கள். வயதினால் தாங்கள் பெரியவர்களாகி விட்ட ஒரே காரணத்தைக் கொண்டு கூட, போதனைகள் உதிர்ப்பதும் போரடிப்பதும் தங்கள் உரிமை என்று நம்பி வாழ்கிறார்கள் பலர். அவர்களிடம் தனி நபரோ பல அன்பர்களோ அகப்பட்டு விட்டால் போதும்! பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!’ என்ற கொள்கையை உடையவர்கள் தம் இஷ்டம் போல் அபிப்பிராயங்களை உதறி அலசிப் பிழிந்து தள்ளத் தயங்குவதே யில்லை.
  அந்த ரகத்தைச் சேர்ந்தவர் ஞானசம்பந்தம். 'அது தான் நான் சொல்லுகிறேன். மனிதனை மனிதன் சந்தேகிக்கிறான். அடுத்தவனோடு தாராளமாகப் பழகுவதில்லை. முன்னாலே ஒரு ஊரில் இருப்பவருக்கு அந்த ஊரில் உள்ள எல்லா வீட்டுக்காரர்களின் குல முறை சரித்திரம் நிகழ்கால விவரம் அனைத்தும் தெரியும். தெரிந்து கொள்ளும் பண்பு இருந்தது. பரஸ்பரம் பழகும் ஆசை யிருந்தது. இப்ப என்ன? ஒரே தெருவிலே உள்ளவர்கள்—தெருவைச் சொல்வானேன்? பக்கத்துப் பக்கத்து வீடுகளையே எடுத்துக் கொள்ளுங்களேன்! அடுத்த வீட்டிலே இருப்பது யார் என்று கூடத் தெரியாது. ஒரே வீட்டிலே ஒன்பது குடித்தனமிருக்கலாம். இருந்தாலும் பரஸ்பரம் பழகிக் கொள்ளாமலே காலம் கழிப்பது சகஜமாகி விட்டது.'
  தானும் ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக 'ஆமாமா, அப்படித்தானிருக்கு வாழ்க்கை' என்று சொல்லிவைத்தான்.
  'வாழ்க்கையின் மேல் பழி போடுவதில் பயனில்லை. வாழ்க்கை என்பதே மனிதர்களாக அமைத்துக் கொள்வது
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/26&oldid=1682199" இலிருந்து மீள்விக்கப்பட்டது