உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சின்னஞ் சிறு பெண் (மொழிபெயர்ப்பு).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சின்னஞ் சிறு பெண்

5



களாலும் உச்சரிக்கப்பட்ட ஒரு இறுதிச் சடங்கு போல் தான் அவ் வார்த்தைகள் ஒலித்தன. திடீரென்று அந்தக் கிழவனும் கிழவியும் வெகு வேகமாகப் பேசத் தொடங்கினார்கள். அதனால் ஒருவர் வாயிலிருந்து மற்றவர் வார்த்தைகளைப் பிடுங்கிக் கொள்வது போல் தோன்றியது. அவர்களுக்கு நடுவே உட்கார்ந்திருந்த நான் இருவரையும் மாறி மாறிப் பார்ப்பதற்காக என் தலையைத் திருப்பிக் கொண்டே இருந்தேன்.

“போலீஸ்காரன் ஒருவன் அவளை எங்கள் ஊருக்கு அழைத்து வந்தான். இவளை யாருடைய பாதுகாப்பிலாவது விட்டு வையுங்கள்' என்று சொல்லி, ஊர்ப் பெரியவர்களிடம் ஒப்படைத்தான்.”

“அதாவது, அவளுக்கு ஒரு வீடு தேடிக் கொடுங்கள் என்று அர்த்தம்” என்று கிழவன் விளக்கம் கூறினான்.

“அதனால் அவர்கள் அவளை எங்களிடம் அனுப்பி விட்டார்கள்.”

“நீ அவளைப் பார்த்திருக்க வேண்டும்-குளிரினால் உடம்பு பூராவும் சிவப்பேறி நடுநடுங்கிக் கொண்டு.”

“அவ்வளவு சின்னஞ் சிறு பெண் அவள்!”

“அவளைப் பார்க்கவும் எங்களுக்கு அழுகை வந்தது.”

“கடவுளே, இப்படிப்பட்ட ஒருத்தியை இது மாதிரி இடத்திற்கா அனுப்புவது என்று நாங்கள் நினைத்தோம்.“

“என்ன காரணத்திற்காக? என்ன குற்றத்துக்காக?”

“இந்த வட்டாரத்திலிருந்துதான் அவள் வந்திருந்தாள்.”