தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
45
புகழ் பெற்ற நடிகையாக ஒரு காலத்தில் விளங்கி வந்த பி. கே. சரசுவதியை அவர் திருமணம் செய்த கொண்டவர். அவரோடு உரையாடிக் கொண்டிருந்த போது ஞானியாரடிகளைப் பற்றி பேச்சு எழுந்தது. தாம் அம்மடத்தில்தான் தமிழ் படித்ததாகவும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்த வித்துவான் இராசக் கண்ணனார் ஞானியாரிடம் தமிழ் படித்தவர் என்றும், அவர் தமது பெரிய தாயாரின் மகன் என்றும் என்னிடத்தில் கூறினார்.
நான் சென்று உரையாடுகிற தமிழ் அறிஞர்களெல்லாம் அவர் பெருமையைப் பேசலாயினர். அனைத்தையும் விட சர். ஏ. டி. பன்னீர்செல்வத்தைப் பற்றி கட்டுரை எழுத தஞ்சை மாவட்டத்திலுள்ள (1987 - 88 களில்) சில இடங்களுக்கு சென்றபோது அவரது உறவினர்கள் குடியிருந்த செல்வபுரம், தீபங்குடி, காப்பனாமங்கலம் ஆகிய ஊர்களுக்கும் செல்ல வேண்டிவந்தது. - தீபங்குடியில் இருந்த பன்னீர்செல்வத்தின் உறவினர் இராணுவத்தில் அதிகாரியாக இருந்தவர் - முற்றிலும் ஆங்கில பாணியில் வீடு, உடை, பேசும்பாணி போன்றவற்றில் இருந்த அவர்- பன்னீர்செல்வத்தை அத்தான் என்றே கூறி அவரைப் பற்றி சொல்லி வந்தபோது ஞானியாரடிகளைப் பற்றியும் குறிப்பிட்டது எனக்கு பெரு வியப்பாக இருந்தது. அவரது மிகவும் வித்தியாசமான கிறிஸ்தவ பெயர் எனக்கு நினைவில் இல்லை. கிறிஸ்தவரான அவர் வணக்கத்திற்குரிய மகான் என்று பலமுறை அவரைப் பன்னீர்செல்வம் தமது குடும்பத்தாரிடம் பேசியுள்ளதை சந்திப்பின்போது அவர் நினைவு கூர்ந்தார்.
புலவர் பொன்னிவளவனுடன் பேசிக் கொண்டிருந்த போது த. வே. உமாமகேசுவரனார் ஞானியாரடிகளிடம் பெரு மதிப்பு வைத்திருந்ததாகவும், த. வே. உ. அவர்கள் புலவர் பொன்னிவளவனின் உறவினர் என்றும் தெரிந்து கொண்டேன்.
ஆங்கில ஆட்சியின்போது தஞ்சை மாவட்டத்தின் இரட்டையர்களாகச் செயல்பட்ட சர். ஏ. டி. பன்னீர்செல்வமும் த. வே. உமாமகேசுவரனாரும் தருணம் வாய்க்கிறபோதெல்லாம் ஞானியாரடிகளின் அறிவுரைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பது கடந்தகாலப் பதிவுகளிலிருந்து கிடைக்கின்ற செய்திகளாக இருக்கின்றன.