தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
87
நூல்களாகக் காணப் பெறுவதால் அடிகள் முத்தமிழும் வல்ல முனிவர்களாவர்.
இவர்களது வரலாறு, கிடைத்த ஆதாரங் கொண்டு ஒருவாறு விரித்தெழுதப் பெற்றுள்ளது. கோவல் ஆதீனக் குருமணி என்னும் பெயரினதாய், 1972ல் இம் மடாலயத்தின் 17ஆம் வெளியீடாக அந்நூல் வெளியிடப் பெற்றுள்ளது.
வரன்முறை : இரண்டாம் குருநாதராகிய ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகட்குப் பின், ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக சங்கண வசவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளும், அவர்களையடுத்து, ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பரசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளும் தலைமையேற்றருளிச் சிவஞானம் பாலித்தருளினார்கள்.
இந் நால்வருக்குப் பின்வந்தவர்களே ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளாவார்கள்.
இனி அவர்களது வரலாறு விரித்துரைக்கப் பெறும்.
நாடு : 'நாடென்ப நாடா வளத்தன' என்றார் வள்ளுவர். தமிழ் நாட்டுத் நெற் களஞ்சியம் சோழ நாடு என்பதை உலகமறியும். பார்க்கு மிடமெல்லாம் பசிய வயல்களையும், தழைத்துச் செழித்த சோலைகளையும் பெற்று விளங்குவது. காவிரித்தாய், தான் தோன்றும் மலை நாட்டினின்றும், பாய்ந்து ஓடிவரும் பரந்த இடத்தினின்றும், திரட்டிக் கொண்டு வந்த செழிப்புள்ள வண்டல் முதலான உரங்களை யெல்லாம், பற்பல கால்கள் மூலமாக வழங்கிச் செழிக்க வைக்கும் நாடன்றோ சோணாடு? ஒளவைப் பிராட்டியும், 'அதனை வள நாடு' எனப் போற்றிய தோடமையாது, மேதக்க என மேன்மையுங் கொடுத்துக் குறிப்பிடுகின்றார். வளமிக்க நாடு இதுவே யாதலால் வளவர் எனவே சோழ மன்னவர் குறிக்கப் பெற்றனர்.
சோறு உடையதாதல் மட்டுமின்றி,ஆங்காங்கே தெய்வத் திருக் கோயில்களையும் நிறையப் பெற்றிருப்பது சோழ வளநாடே. தேவாரம் பெற்ற சிவத்தலங்கள் மட்டும் 190, பெறாதன பல. வைணவத் தலங்களும் பல. பிற்காலக் சோழ வேந்தரதுதலைநகர் தஞ்சாவூர் முற்காலச் சோழர்கள், திருச்சத்தி