உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

81

அழைத்துச் செல்ல முற்படுகின்றனர். அவ்வகையில் திருமுறையாசிரியர்கள் முன்னிற்பவர். அவர்தம் பாக்கள் உள்ளத்தை உருக்குந்தகையன. ஓர் எடுத்துக் காட்டால் ஈண்டு விளக்குதல் மிகையன்றெனத் துணிந்து ஒன்று காண்போம்.

சால இனிய கனி : நாம் பல பல சுவைப் பொருள்களை நுகர்கிறோம். வாய்க்கினியவற்றின் சுவையொன்றினை மட்டும் குறிப்பிடலாம். இனிய கனி ஒன்றின் சுவையினை - முன் நுகர்ந்த பயிற்சியால் மீண்டும் - சுவைக்க முற்படுகிறோம். பற்று மிகுதி காரணமாக அஃது அண்மையிற் கிடைக்கக் கூடாதேனும், விலை மிக உடையதேனும், தொலைவோ, பொருட்செலவோ கருதாமல் எப்படியேனும் அதைப் பெற்றுண்ண முற்படுகிறோம்; பெறுகிறோம்; உண்கிறோம். அப்போதைய ஆசையை ஒருவாறு நிறைவேற்றிக் கொள்கிறோம். அவா மேலீட்டினாற் பெற்ற தாயிற்றே; அரிதின் முயன்று பெற்றதாயிற்றே; பெரும் பொருட் செலவிற் பெற்ற தாயிற்றே என அக்கனியை நீண்டநேரம் சுவைக்க எண்ணிய ஒருவர், நீண்ட நேரம் வாயிலேயே அடக்கி வைத்திருந்தாலும் அச்சுவை நீடிக்கிறதோ ? அல்லது அடிநாவைத் தாண்டிய பிறகும் அதன் சுவை நமக்கு தெரிகிறதோ? இல்லை யென்பதை எவரும் அறிவோம். எனவே ஐம்புல நுகர்ச்சியால் பெறப்படுவன யாவும் சிறுகால அளவு இன்பம் பயப்பன வேயாம். இது கொண்டே பேரின்பம் உண்டென உணர்தல் நம் கடனன்றோ? அதனைச் சுவைக்கனியாக்கியே தருகிறார் திருநாவுக்கரசர். 'புனிதன் பொற்கழல் ஈசன் எனுங்கனி, இனிது சாலவும்’ எனக் கூவியழைத்துக் கூறுகின்றார். மனம் படைத்தவர் - பகுத்துணரும் தன்மை படைத்தவர் - யாரோ அவரை, ‘மனிதர்காள் இங்கே வம், ஒன்று சொல்லுகேன் என்றழைத்துக் கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே என, முன் வந்தவர் தம் அவாவினைத் தூண்டி, அக்கனி சிறிதுநேர இன்பந்தரும் எல்லாக் கனியையும் போன்றதன்று; சால இனிய கனி என அறிவித்து, அதனை நுகர்வோரைப் பக்குவி களாக்கும் குருவாகிய அவர்தம் பாசுரத்திற் பொதிந்துள்ள நுணுக்கங்களை நுனித்தறிதல் நம் கடனன்றோ ? மணிவாசகப் பெருந்தகையும் ‘நினைத்தொறும், காண்டொறும், பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக, ஆநந்தத் தேன் சொரியும் குனிப்பு உடையானை எண்ணி, அவ்வின்பத்தை நுகருமாறு தும்பியரசனுக்கே கூறுகிறாரே ஏன்? அந்தப் பக்குவம், அவர்கண்ட மனிதருக்கு இல்லை யென்பதாலோ சிந்தனைக்குரிய பாட்டே அது. 'கனியினும், கட்டிபட்ட கரும்பினும்,