உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

வல்லிக்கண்ணன்

தட்டியிருந்தால் அதைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டு கூத்தாடுவார்கள். ஸ்ரீ ஞானியார் சுவாமிகளின் ஆழ்ந்த தமிழன்பில் இத்தகைய குறுகிய சமயப் பற்று குறுக்கிடுவது கிடையாது. உண்மைக் கவிதைக்கும், வெறும் செய்யுளுக்கும் அவர்கள் நன்றாக வித்தியாசம் அறிந்தவர்கள் எதெதற்கு எந்த அளவில் மதிப்புக் கொடுக்க வேணுமோ, அவ்வளவுதான் கொடுப்பார்கள்.

இந்தியாவின் புராதனமான ஆதிசமயம், சைவ சமயம். உபநிஷதங்கள் கூறும் வேதாந்த மதமும் சைவ சமயமும் ஒன்றேதான் வடநாட்டார் கோதுமையை ரொட்டி தட்டிச் சாப்பிடுகிறார்கள். தென்னிந்தியர்கள் சிலர் அதே கோதுமையைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால் இரண்டும் கோதுமைதானல்லவா? இவ்வாறே வட இந்தியாவில் வேதாந்தமாகத் தழைத்த சமயந்தான், தென்னாட்டில் சைவமாக வளர்ந்தோங்கிற்று. ஸ்நாதன தர்மத்தின் இந்த இரண்டு பகுதிகளுக்கும் பொதுவான ஒரு சிறப்பு உண்டு. வேதாந்த மதம் எல்லா மதங்களையும் கடவுளை அடையும் வழிகளாக ஒப்புக் கொள்கிறது: சைவ சமயமும் அவ்வாறே புதிதாக உண்டான மதங்கள் தங்களுடைய பெருமையை நிலை நாட்டுவதற்காகப் பிற மதங்களுடன் சண்டையிடுவது அவசியமாயிருக்கலாம். அந்த அவசியம் ஆதி சமயங்களுக்கு இல்லையல்லவா? அண்ணன் தம்பிகள் பாகப்பிரிவினைக்காகச் சண்டை போட்டுக் கொள்வது இயற்கை; ஆனால் தகப்பனாரே பிள்ளைகளுடன் பாகத்துக்குச் சண்டை போட்டால் அதைவிட மூடத்தனம் வேறென்ன இருக்கிறது? ஆகையினால்தான் வேதாந்தத்திலும் சைவ சமயத்திலும், "சர்வ மத சம்மதம்" என்னும் அரிய கொள்கையை நாம் காண்கிறோம். ஆனால், சைவத்தின் இந்தத் தனிப் பெருமையைக் குலைக்க விரும்பும் சில சைவப் பெரியோர்களும் இருக்கிறார்கள். மற்ற மதங்களைக் குறைத்துச் சொன்னால்தான் சைவத்தைப் பெருமைப்படுத்தியதாகும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஸ்ரீ ஞானியார் சுவாமிகள் 'வீர சைவர்' ஆனபோதிலும் அத்தகைய வீரப் பிரதாபங்களை அவர்களிடம் காணமுடியாது. சர்வ மத சமரஸ் ஞானமுடைய உண்மை ஞானியார் அவர்.

"வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலைபெற்ற
வித்தகச் சித்தர் கணத்"

தைச் சேர்ந்த பெரியார் என்றும் சொல்லவேண்டும்.