தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
93
ஆடல் பாடல்களில் மனம் செலுத்த விரும்பி அப்பொது மகளையும், அவளது ஆடல் பாடல் குழுவினரையும் இசைக் கருவி முதலியவற்றுடன்வருமாறு ஆள் போக்கினான், அவர்களும் வந்தனர். ஆடல், பாடல் தொடங்கின. மன்னவனும் அவற்றால் மகிழ்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான். அந் நிகழ்ச்சிக்குப் பலர் வந்திருந்தனர். இரவின் நெடும் பொழுது கழிந்து விட்டது ஆடல், பாடல்களாற் பொது மகளும் சோர்வு மிக அடைந்தாள் மன்னவனோ, ஆட்டத்தை நிறுத்த உத்தரவுதரவில்லை. அவளிடம் அதிகச் சோர்வு கண்ட நட்டுவன் அவளிடம் கூறுவான் :- “நீ இது காறும் நல்ல பெயர் வாங்கி விட்டாய். பொழுது புலரும் வேளையும் நெருங்கி விட்டது. இனி சிறிது நேரம் பொறுமையுடன், உன் உடற்சோர்வினையும் பொருட்படுத்தாமல் ஆடு. வாங்கிய பெயரை இழக்காமல் கடமையைச் செய்தாய் என்ற சிறப்பைப் பெறு. அதனால் உனக்கு நிலைத்த புகழே கிடைக்கும்” என்று ஆறுதல் கூறி ஆட்டத்தில் ஈடு படுத்தினான் அதனால் அவள் ஊக்கத்துடன் ஆட்டத்தில் ஈடுபட்டாள்.
கிழ அரசன், இந்தச் சொற்களைக் கேட்டான்; இது வரை நல்லவன் என்று பெயரெடுத்துள்ளோம்; இவளைத் துன்புறுத்தியவன் என்ற அவப் பெயர் வருமாறு ஏன் நடந்துக் கொள்ள வேண்டும்? என்றெண்ணி ஆட்டத்தை நிறுத்துமாறு ஆணைதந்தான்.
நட்டுவன் கூறியவைகளைக் கேட்ட அரசகுமாரனோ “தந்தை இன்னும் நீண்டகாலம் உயிர் வாழ மாட்டார் ; இதுவரை நல்ல மகன் என்று பெயரெடுத்துள்ள நாம், இன்னும் சில காலம் பொறுத்திருந்து அவருக்குப் பிறகு அரசுரிமையை ஏற்பதே ஏற்புடைச் செயலாகும்; அவசரப்பட்டுத் தந்தைக்கு ஊறு விளைவித்து வீண் பழி பாவங்களுக்கு ஆளாகாமல், பொறுத்திருப்போம்” என்றெண்ணித் தன் தகாத எண்ணத்தை அறவே விட்டொழித்தான்.
அந்த அவையிலிருந்த முற்கூறப் பெற்ற சந்நியாசியும் நட்டுவன் வார்த்தைகளைக் கேட்டு, ‘என்னே என் மடமை! இதுகாறும் பல ஆண்டுகளாக நாம் கைக்கொண்ட புலனடக்கம் முதலியவற்றாற் பெற்ற பெரும் பேறு என்னாவது கைக்கொண்ட பிரமசரிய விரத முதலியவை அவமாகிப் போவதோ? என்றெண்ணித் தான் செய்யத் துணிந்திருந்த தகாத செயலை, அக்கணத்திலிருந்து நினைக்கவும் கூடாதென்று உறுதி பூண்டார்.