அன்புள்ள மாணாக்க,
- நலம், நலம் பல பெருகுக!
உன் கடிதம் கிடைத்தது. உனக்கு வேலை மிகுதியாயிருப்பதாக எழுதியிருந்தாய். ஆமாம், இந்த வயதில் எவ்வளவு வேலையாயிருந்தாலும் முயன்று செய்யத்தான் வேண்டும். சில சமயம் பல வேலைகள் சுமந்து போவதாகவும் குறிப்பிட்டிருந்தாய். வேலைகள் சுமையாகக் குவியாமல் இருப்பதற்கு ஒரு வழி உண்டு. அந்த வழியினை நீ என்னிடம் கல்வி பயின்று கொண்டிருந்த காலத்திலேயே நான் சொல்லியிருப்பதாக நினைவிருக்கிறது. மீண்டும் அதனை ஈண்டு உனக்கு நினைவுபடுத்துகிறேன்.
எந்த வேலையாயிருப்பினும் உரிய காலத்தில் முடித்துவிட வேண்டும். பிறகு பார்ப்போம் என்று ஒத்திப்போடும் இயல்பு நம் ஆக்கத்திற்குப் பெருந்தடைக்கல்லாகும். முழு வேலையினையும் ஒத்திப் போடுவதற்கு மட்டும் இதனை நான் கூறவில்லை; குறித்த ஒரு வேலையை அரைகுறையாய் விட்டு வைப்பதற்கும் சேர்த்தே நான் இந்த அறிவுரையினைக் கூறுகிறேன். அரைக் கிணறு தாண்டலாமா? வேலையைக் குறையாய் நிறுத்தும் இயல்புடையவரிடந் தான் வேலைகள் மலையெனக் குவிந்துவிடுவது வழக்கம். முற்பகல் வேலையைப் பிற்பகல் செய்ய, பிற்பகல் வேலையை மறுநாள் செய்ய,-