உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

[முதற்

மிறைத் தன்மையோடு இலக்கணச்சந்திகளுஞ் செறிந்தன. எதிர்பாராதபடி சொற்கள் பிளந்து பிரித்துப் பொருள் கொள்ளக் கிடந்தன. இப்படியென்றால் இம்மிறைக் கவிகள் யாருக்குபயோகம்? மிறைக் கவிஞன் தானே மகிழ்ந்து கொள்ளுதற்கு அவை ஒரு வேளை பயன்படலாம். ‘வகையுளி’ என்றதற்கு வேண்டிய உதாரணங்கள் இம்மிறைக் கவிகளிற் காணலாம். மூன்றாவது: இத்தகைய மிறைக்கவிகள் படிப்போனது காலத்தையும் வீணாக்கிப் பலவிடங்களினும் அவனை மயங்க வைக்கின்றன. ஏன்? சிற்சில சமயங்களிற் பாடினானையுமே மயங்கவைக்கின்றன. இத்தன்மையான இடர்ப்பாடுகள் நிரம்பிய மிறைக் கவிகள் நந்தமிழ்ப் புலவர்கள் மனங்களைக் கவராதொழிவனவாக.

இவ்வாறே முற்கூறிய பாட்டியலுட் கூறப்பட்டுள பொருத்தங்கள் முதலியனவும், ஆனந்தக் குற்றம் முதலியனவும் நாளாவட்டத்திற் பயனிலவாய்க் கழிந்துபடுமென்பது தோன்றுகின்றது. அநேகர் இக்காலத்தில் அவற்றைக் கவனிப்பதில்லை. கருநாடகப் புலவர்கள் இரண்டொருவர் மட்டில் அவற்றைப் பிடித்துக்கொண்டு அவஸ்தைப்படுகின்றனர். அவர்களும் அவற்றை விரைவில் கைவிடுவார்களென்பது சொல்லாமலே யமையும். இனிப் ‘பத்துப் பாட்டுரை’யில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் “நூற்குற்றங்கூகின்ற பத்துவகைக் குற்றத்தே ‘தன்னானொரு பொருள் கருதிக்கூறல்’ என்னுங் குற்றத்தைப் பின்னுள்ளோர் ஆனந்தக் குற்றமென்பதோர் குற்றமென்று நூல் செய்ததன்றி, அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இக்குற்றங் கூறாமையிற் சான்றோர் செய்யுட்கு இக்குற்ற முண்டாயினுங் கொள்ளா ரெனமறுக்க” என்றுரைத்த வரை யாவருங் கவனிக்கத்தக்கது.

இதுகாறும் தமிழ் மொழியான் ஐவகை யிலக்கணங்களையும் குறித்துக் கூறினோம். இனித் தமிழ்மொழியின் தோற்றமும் தொன்மையும் பற்றி விரித் துரைப்பாம்.

ஐவகை இலக்கணம் முற்றிற்று.

V. பாஷையின் தோற்றமுந் தொன்மையும்.

லகின் கண்ணே மக்கள் ஒருங்கு கூடி வாழவேண்டியவராதலின், அவர்கள் அடிக்கடி தங்கள் கருத்துக்களை யொருவருக்கொருவர் வெளியிட்டுக் கொள்வது அவசியமாயிற்று. ஆகவே அவர்கள் கைவாய் முதலிய உறுப்புக் களாற் பலவிதச் சைகைகள் செய்து காட்டித் தங்கள் கருத்துக்களை வெளியிடுவாராயினர். இத்தகைய கருத்து வெளியீட்டுக் கருவியாகிய சைகையை ‘இயற்கைப் பாஷை’ யென்பர் சிலர்.

இவ்வியற்கைப் பாஷை முதலிற் காட்சியளவில் நின்று, பின்னர்க் கேள்வி யளவினும் பரவிற்று; அஃதாவது, சில ஒலிகளும் ஒலிக் கூட்டங்களும் கருத்து வெளிப்பாட்டிற்குக் கருவியாகிய அச்சைகைகளுடன் கூடின. அவ்வொலிக