பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

பாரதிதாசன்


சிறு குழந்தைகளுக்குக் கோழியினிடம் உள்ள ஈடுபாடு அதிகம், அதன் கொண்டையின் கவர்ச்சி பெரிது. எனவே கோலம் நிறை கோழியாகவே கவிஞர் அதைக் காண்கிறார். முருகன், வானவர் துன்பத்தைப் போக்கி, சூரபதுமன் போன்ற அசுரரிடமிருந்து காத்தவன் ஆதலால் சேவகனுமாகிறான்.

முருககன் ஆறுமுகமும் ஆறிரண்டு திண்தோளும் உடையவன், வேதங்கள் அவனுடைய பாதுகைகள் என்பன, அவனுடைய திருமேனியைக் குறித்த ஐதிகங்கள்.

ஆறிரண்டு தோளானோ
ஆறு முகத்தானோ
தேறு மறை கொஞ்சம்
சிறுசதங்கைத் தாளானோ.

குழந்தையைக் கொஞ்சும்போது, குழந்தைக் குமரனை ஏந்திச் சிரம்மோந்து குலவிய பெண்கள் நினைவு வருகிறது. சரவணப் பூம்பொய்கையில் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் அறுவரும் எடுத்து அணைத்துக் குலவினார்கள். அவர்கள் மட்டுமா? தாயான பார்வதி தேவியும், கங்காதேவியுமே எடுத்துக் குலவினார்கள்.

ஆயிமார் அறுவர்களும்
அம்பிகையும் கங்கை மின்னும்
சேயே என் றேந்திச்
சிரமோந்து கொள்குருந்தோ.

(ஆயிமார் - ஆய்மார், தாய்மார். குருந்து - குருத்து.)

பாடுகின்ற போது, ஓசை நயத்தின் பொருட்டு, ஆய்மார் என்றிருக்கத் தக்க சொல், ஆயிமார் என்று வருகிறது.