பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

சரித்திரமும் மனிதனும் உள்ளடங்கியதோர் ஆன்மீகத்தின் வடிவம் இன்றையக் குடியரசுத் தலைவர். முன்னையத் தலைவருக்குத் துணை நின்ற பத்து ஆண்டுப் பழக்கம் இப்பொழுதும் இவருக்குத் துணை நிற்கும், ஆசிரியர் ஒருவர் இப்பொழுது ஜனாதிபதி. தென்னகம் ஈன்ற குடிமகனது தத்துவச் சிந்தனை நயங்களைத் தொடர்ச்சியாகக் கேட்க மேலை நாடுகளிலே போட்டி, போட்டியும் பூசலும் மண்டிக்கிடக்கின்ற அரசியல் சகதியில் கால் பாவாமல், தேசீயப்பற்றும் ஒன்றுபட்ட ஐக்கிய உணர்ச்சியும் நெஞ்சில் காலூன்றி நின்ற நிலையிலே, டாக்டர் அவர்களைச் சுற்றி அடி நாட்கள் சுழன்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தொட்டு, காசிப் பல்கலைக் கழகம் வரையிலும்; வரையிலாப் பணி இயற்றி மாமேதையாக விளங்கிய இவர், இன்று பண்பட்டுப் பக்குவம் பெற்ற தலைவராக அமைந்து - பண்பாட்டுப் பெருமையையும் நாட்டின் வளப்பத்தையும் நிலை நாட்டிச் செழிக்கச் செய்ய வெல்ல ஓர் ஒப்பற்ற தந்தையாக அமர்ந்து, ஜனாதிபதிய பீடத்தில் இருக்கை கொண்டுள்ள இவரை இதயம் ஒன்றிய பாசத்துடனும் பற்றுதலுடனும் வரவேற்றுக் கைகூப்பித் தொழுகின்றோம்.

“குண நலம், சான்றோர் நலனே!” என்கிறது தெய்வத் தமிழ்மறை, இக்குணநலம் தழுவிய சான்றோர் திலகம் டாக்டர் ராதாகிருஷ்ணன். அன்னாரது தூய நெஞ்சத்தை பிரியாவிடை பெற்றுச் சென்ற பாபு இராஜேந்திரபிரசாத்தைப் பற்றிப் புகழ்ந்துரைத்த பான்மை நமக்கு எடுத்தோதுகிறதல்லவா?

“தேசத் தொண்டு என்பதே மனித சமுதாயத்தின் தொண்டு என்பதே என் கருத்தாகும்,” என்பது காந்திஜியின் தத்துவம். இத்தத்துவம், மெஞ்ஞான மேதைக்கு மிகப் பொருந்தும்.