பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12

தமக்குத் தேவையாகும் பொருள்கள் எல்லாவற்றையும் தாமே ஆக்கிக்கொள்ளவல்ல அறிவு ஆற்றல்களைக் குறைவறப் பெற்றவர், உலகத்தில் எவரும் இலர். ஒருவர் தேவையைக் காட்டிலும், அவர் அறிவும் ஆற்றலும் குறைபாடுடையவே. எல்லாம் வல்லராதல் மக்கட்கு இயலாது. ஒருவர் ஒரு துறையில் வல்லராகப் பிறரொருவர் பிறிதொரு துறையில் வல்லராதலே உலகியல், உழவுத் தொழில் வல்லவன். உடைத் தொழிலிலும் ஊதாள் தொழிலிலும் வல்லனாகான் : உடைத்தொழில் வல்லவன், உழவு முதலாம் பிற தொழில்களில் வல்லனாகான், வணிகத் தொழில் வல்லவன்; அணி ஆக்க அறியான் அணி ஆக்க அறிந்தான், வணிகத் தொழிலில் வல்லனாதல் இலன்.

தேவை பெரிதாகவும், அதைத் தேடித் தரும் ஆற்றல் குறைவாகவும் அமையப் பெற்ற மக்கள், தம்மால் ஆக்கிக் கொள்ள இயலாத ஒரு பொருளை அதை ஆக்கித் தரவல்ல ஆற்றல் உடையார் துணைகொண்டு அடைவதும், தம்மால் ஆக்கித்தரவல்ல ஒரு பொருளை அதை ஆக்கிப் பெற மாட்டாதார்க்கு அளித்துத்துணை புரிவதும் செய்வர். உழவன், உணவளித்து உடையும் பிறவும் பெறுவன் : உடைத் தொழில் வல்லான், உடை அளித்து, உணவும், உறுபொருளும் . பெறுவன். வணிகன், வாணிகத்தால் தம் வளம் வழங்கி, அணியும், ஆடையும் பெறுவன் அணி ஆக்க அறிந்தான், அணி அளித்து அதற்கு ஈடாகத் தனக்கு வேண்டுவன பெற்று வாழ்வன். இவ்வாறு பிறர் துணையைத் தாம் பெற்றும், பிறர்க்குத் தாம் துணை புரிந்தும் வாழும் மக்கள், ஒரிடத்தே. ஒன்று கலந்து வாழக் கடமைப் பட்டவராயினர்.