பகுதி]
தமிழ்மொழியின் வரலாறு
205
கண் விசேஷ கௌரவ முடையராய் அதனைப் பெரிதும் பயில்வாராயினர், வடமொழியின் பாகதங்களையும் அவற்றி னிலக்கணங்களையும் நன்குணர்ந்து கொண்டனர். இத்தகைய சைனப் புலவர்கள் தமிழ் மொழியையும் அப்பியசிக்கப் புகுந்து, தமிழின் கண்ணே அளவிறந்த வடசொற்களை யேற்றினர்.
அத்துணையோடமையாது ‘மணிப்பிரவாளம்’ என்றதோர் புதிய பாஷை வகுத்துவிட்டனர். அஃதாவது தென்மொழியும் வடமொழியும் சரிக்குச்சரி கலந்தபாஷையாம். மணியும் பவளமுங் கலந்து கோத்ததோர் மாலை காட்சிக்கின்பம் பயத்தல் போலத் தமிழுஞ் சம்ஸ்கிருதமுங் கலந்த பாஷை கேள்விக்கின்பம் பயக்குமென்ற போலியெண்ணமே இத்தகைய ஆபாச பாஷையொன்று வகுக்குமாறு தூண்டிற்று. ‘ஸ்ரீபுராணம்’ என்னும் சைன நூல் முழுவதும் மணிப்பிரவாள மென்னும் இவ்வாபாச நடையின் இயன்ற தாமாறு காண்க.
இவ்வாறு சைனர் ஒருபுறஞ் செய்துகொண்டு செல்லாநிற்க, மற்றொரு புறத்தில் ஆரியப்புலவர் சிலர் தமிழ்மொழியை யப்பியசித்துக் கொண்டு நீதிமார்க்கத்தையும் சமய சாஸ்திரங்களையும் தமிழர்க்குப் போதிப்பேமெனப் புகுந்து, தமது கருத்துக்களை யெல்லாம் மேற்கூறிய மணிப்பிரவாள பாஷையில் வெளிப்படுத் துரைப்பாராயினர். ‘நாலாயிரப்பிரபந்தம்’ என்ற தமிழ் நூலிற்கு வியாக்கியானங்களும் இத்தகைய மணிப்பிரவாள நடையில் வகுக்கப்பட்டிருத்தல் காண்க. இவ்வண்ணம் பலதிறத்தானும் வடசொற்கள் வந்து தமிழின் கண் அளவின்றி யேறின.
தமிழின்கணுள்ள ‘இரட்டைக்கிளவி’ யென்பது ஒருபுறமிருக்க, ‘இரட்டைப்பதம்’ என்பதொரு வகையும் மற்றொருபுறத்தி லேற்படா நின்றது. ஒரே சொல் நேரே வடமொழியினின்றும் தமிழிற்போந்து வழங்குவதன்றியும், வட மொழியின் பாகத வழியாகவும் வந்து தமிழில் வழங்குகின்றது. உதாரணமாக, ‘விஞ்ஞாபனம்’ என்பது நேரே வடமொழியினின்றும் போந்தசொல்; ‘விண்ணப்பம்’ என்பது வடமொழியின் பாகத வழியாக வந்த சொல். இல் விரண்டிற்கும் பொருளொன்றே. இவ்வாறு வேண்டாச் சொற்களும் தமிழின் கணேறின, ஏறுகின்றன, ஏறும்!
தமிழ் மொழியின் நிலைமை யிவ்வாறாதலும், வடமொழி யிலக்கணத்தைக் கலந்து தமிழிலக்கணமும் வகுக்கப் புகுந்து விட்டனர் சிலர். ‘தொல்காப்பிய’த்திற்கு உரைவகுத்த ஐவருள் முதனால்வரும் ஏறக்குறையத் தமிழ்ப்போக் கையேபற்றி யுரைவகுத்துச் சென்றனராகச் சேனாவரைய ரொருவர்மட்டில் வடமொழிப்போக்கைச் சிறிதளவு கலந்து சொல்லதிகாரத்திற்கு உரைவகுத்தனர். தனித்தமிழ் நூலாகிய ‘திருக்குற’ ளிற்குப் பரிமேலழகரும், வடநூலார் மதம் பற்றியே யுரைவகுத்தேகினர். ‘நன்னூல்’ செய்த பவணந்தியாரும், ‘சின்னூல்’ செய்த குணவீரபண்டிதரும் வடநூலிலக்கணப் போக்கைத் தழுவுவாராயினர். ‘வீரசோழிய’மும் அதன் உரையுமோ சொல்ல வேண்டுவனவல்ல; இவை விசேஷமாய் வடமொழி யிலக்கணங்களைத் தமிழின்கட் புகுத்துவன.