பக்கம்:சான்றோர் தமிழ்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சுவடிகள் தந்த தமிழ்த் தாத்தா

7

சாமிநாத ஐயர் முதன் முதலாக அரியலூர் சடகோப ஐயங்கார் என்பவரிடத்தில் தமிழ் பயின்றார். சாமிநாத ஐயரே,

‘தமிழில் அதிகப் பழக்கமும் அதற்கு உபகாரப்படும்
வகையில் சங்கீதமும் இருப்பதையே நான் விரும்பி
னேன். சடகோபையங்காரிடம் என்று நான்
மாணாக்கனாகப் புகுந்தேனோ அன்றே தமிழ்த்
தாயின் அருட்பரப்பிற் புகுந்தவனானேன்.
எனக்குத் தமிழில் சுவை உண்டாகும்வண்ணம்
கற்பித்த முதற் குரு சடகோபையங்காரே.’

(என் சரித்திரம்; பக்கம் : 103)

என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செங்கணம் விருத்தாசல ரெட்டியார் என்பவரிடத்தில் தமிழ்க் கல்வி கற்றார். சாமிநாதருக்குத் தமிழில் இருந்த பேரார்வத்தை அறிந்து தமிழ்ப் புல்வர்கள் உள்ள இடங்களுக்குச் சென்று தங்கி இவர் கல்வி கற்கும் வசதிகளை இவர் தந்தையார் விரும்பிச் செய்தார். இவ்வாறு கல்வி கற்றுவருங்கால், ஆசிரியருக்குச் சன்மானமாகத் தருவதற்குச் சாமிநாத ஐயரிடம் பணம் இல்லை என்பதோடு, ஆசிரியரோடு தங்கிப் படிக்கும்போது சாப்பிடுவதற்கு வசதியும் இல்லை. ஆதலால் தாம் எந்த ஆசிரியரிடத்தில் தங்கிக் கற்றாரோ அங்கேயே இலவசமாக உணவுக்கும் ஏற்பாடு செய்து கொண்டார். இவர் தமிழில் காட்டிய ஆர்வத்தையும் அறிவையும் பாராட்டி ஆசிரியர்கள் இவருக்குத் தாமாகவே விரும்பிக் கல்வி கற்பித்ததோடு, உணவுக்கு வேண்டிய வசதிக்கும் ஏற்பாடு தந்து செய்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சான்றோர்_தமிழ்.pdf/9&oldid=1007345" இலிருந்து மீள்விக்கப்பட்டது