பக்கம்:திருவருட் பயன்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



105

உள்ளவாறு அறியும் முறைமையறிவுறுத்துவது அறியும் நெறி' என்னும் இவ்வதிகாரமாகும். மேலை அதிகாரத்திற்குறித்த அருளுருவாகிய குருவின் துணைகொண்டு உயிர்கள் தம்மையும் தலைவனையும் அறியும் முறைமையினைக் கூறுதலின் இது மேலை அதிகாரத்தோடு இயைபுடையதாயிற்று. இவ்வதிகாரம் ஆன்மதெரிசனம் உணர்த்துகின்றது.

இவ்வதிகாரத்தின் முதற்குறள், மேலையதிகாரத்திற் கூறியவாறு இறைவன் குருவாக வந்தருள்புரிதற்கு ஏதுவாக உயிர்களிடத்து அம்முதல்வனது திருவருள் பதியும் எல்லையினை உணர்த்துகின்றது.

நீடும் இருவினைகள் நேராக நேராதற்கண் இறைசத்தி கொளல் கூடும் என இயைத்துப் பொருள்கொள்க. இரு வினை-புண்ணிய பாவங்கள். உயிர்கள் இருவினைப்பயன்களை நுகருங்கால், இன்பத்தின்கண் விருப்பும், துன்பத்தின்கண் வெறுப்பும்கொள்ளுதல் இயல்பாதலின் அவ்விருப்பு வெறுப்புக் காரணமாக அவ்வினைகள் மேலும் கிளைத்து வளர்தலின், "நீடும் இருவினைகள்’ என அடைகொடுத்தோதினார். நீடுதல்மிக்குவளர்தல், இருவினையும் நேராக நேராதல் என்றது, இருவினைப்பயன்களும் சமமாக ஒத்திருத்தலாகிய இருவினையொப்பு. இருவினையொப்பு என்பது, ஆன்மா தான் நுகர்தற்குரிய இருவினைப்பயன்களாகிய இன்பதுன்பங்கள் இரண்டினையும் விரும்புதலும் வெறுத்தலுமின்றி ஒப்பக்கருதும் நல்லுணர்வு. நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானே இதற்கு நாயகமே. (குழைத்தபத்து) எனவரும் திருவாசகத் தொடர் ஆன்ம அறிவின்கண் நிலைபெறுதற்குரிய இருவினையொப்பினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்திருத்தல் காணலாம்.

இனி, நல்வினையுள் மிக்கதாகிய வேள்வி முதலிய புண்ணியமும் தீவினையுள் மிக்கதாகிய கொலை முதலிய பாவமும் ஒருங்கே பக்குவம் எய்திப் பயன்படுதற்கண் ஒத்தனவாயின்,