பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏனெனில், நடவு, களையெடுத்தல் வேலைகளுக்கு இருபது ரூபாய் என்று ஐந்து ரூபாய் கூலி உயர்வைக் கூட அவர்கள் ஏற்கவில்லை. கூலி வாங்குவதுடன் அதே கூலி கொடுக்க வேண்டும் என்றாகிவிடுமே? உழவோட்ட ஆட்கள் கிடைப்பதில்லை. சில இடங்களில் உபரியாகச் சாராயம் வாங்கவும் காசு கேட்பதாகச் சொல்லப்படுகிறது.

பெண் ஏர் பிடித்து உழுவதில்லை. அது ஒரு தடையாகவே இருக்கிறது. எனவே ஆண், உழவுத் தொழிலில் எப்படி இருந்தாலும் கோலோச்சுபவனாகவே இருக்கிறான். பெண் இந்தத் தொழிலில் அதிகமாக வஞ்சிக்கப்படுகிறாள் எனலாம்.

இந்த நிலையை மாற்றி, பெண் தன் உழைப்பின் பலனையும், உரிமையுணர்வையும் பெற, வாய்ப்பாகத் துவக்கப் பட்டதுதான் தமிழ்நாடு பண்ணை மகளிர் பயிற்சித் திட்டம்-அல்லது- ‘தான்வா’ என்ற அமைப்பு ‘தமிழ்நாடு விமன் இன் அக்ரிகல்ச்சர்’ என்ற ஆங்கிலச் சொற்றொடரின் சுருக்கமே ‘தான்வா’வாகும். இது டென்மார்க் அரசின் ‘டேனிடா’ உதவித் திட்டத்தின் ஆதாரத்தில் தோன்றியதாகும். தமிழ்நாடு முழுவதும், சுமார் இருநூறு விவசாயத் தொழில் பட்டதாரிப் பெண்களைத் தேர்ந்து, சிறப்புப் பயிற்சி அளித்து, அவர்களைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறு விவசாயிகளாகிய குடும்பப் பெண்களுக்கு மண் பரிசோதனை, விதைச் செய் நேர்த்தி, நுண்ணூட்ட உரங்கள், நடவு, நீர் பராமரிப்பு, உரமிடுதல் ஆகிய அம்சங்களின் சிறு சிறு நுணுக்கங்களைப் பயிற்றுவிக்கும் திட்டமாகும். இதற்கு முன்னர், உழவர் பயிற்சித் திட்டங்கள் பரவலாகச் செயலாக்கப்படாமல் இல்லை. ஆனால் இதுவோ குறிப்பாகக் கிராமப்புறத்து மகளிரைச் சக்தி மிகுந்தவர்களாக மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரப்படுத்தப்பட்ட திட்டம்.

இந்தப் பெண் பயிற்சியாளர், அந்தந்தக் கோட்டங்களில் உள்ள விவசாய அலுவலர்களின் ஒத்துழைப்புடன், மகளிரைப் பயிற்சிக்குத் தேர்ந்தனர். வாலிப, நடுத்தர வயதுப் பெண்கள், சொந்தக் குடும்ப நிலங்களில் வேலை செய்பவர்களே பயிற்சிக்கு உரியவராயினர். இருபத்தைந்து பேர் கொண்ட குழுவினருக்கு, ஐந்து நாட்கள் பயிற்சி; பயிற்சிக் காலத்தில் ஒரு சிறு ஊக்கத் தொகையும் அளிக்கப் பெற்றது. பிறகு இவர்களே ஒவ்வொருவரும் பத்துப் பத்துப் பெண்களைப் பயிற்றுவித்தார்கள்.


8