தமிழ் வேந்தர் ஒழுக்கம்
ஏறத்தாழ ஆயிரத்து எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன் தமிழகம் தமிழ் மன்னரால் ஆளப்பட்டு வந்தது. சேர, சோழ, பாண்டியர் என்ற தமிழ் வேந்தர் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் வல்ல புலவர், பாணர், கூத்தர் என்போரை ஆதரித்தனர். வேந்தருட் சிலர் கவி பாடும் ஆற்றலும் பெற்றிருந்தனர். அவர் தம் பாக்ககளும், புலவர்கள் தமிழ் முடி மன்னரையும், குறுநில மன்னரையும், பிற வள்ளல்களையும் பற்றிப் பாடிய பாக்களும் மிகப் பல. அவற்றுள் அழிந்தன போக, எஞ்சிய பாக்கள் புறநானூறு என்னும் தலைப்பில் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இந் நூலிலுள்ள பாக்கள் பல நூற்றண்டுகளில் பல புலவர்களால் பாடப் பெற்றவை; அப்புலவர்கள் பல நாடுகளைச் சேர்த்தவர்கள். புறநானூற்றுப் பாடல் களால் பண்டைத் தமிழ் வேந்தர் செங்கோற் சிறப்பும், போர் முறையும், அவர்கள் புலவர்களைப் போற்றிய திறனும், தமிழ் மக்களுடைய பழக்க வழக்கங்களும், நாகரிகமும், ள்கரிகத்தின் தலைமணியான பண்பாடும் நன்கறியலாம்.
பூதப் பாண்டியன்
இன்றைய மதுரை, இராமநாதபுரம், திருநெல் வேலி என்னும் மூன்று மாவட்டங்களும் பண்டைக் காலத்தில் பாண்டிய நாடு எனப் பெயர்பெற்றது.