பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

221

அன்று பால் எடுத்துக் கொண்டு சொசைட்டிக்கு வந்தவனைச் சரோ பிடித்துக் கொள்கிறாள்.

“மருந்து குடிச்சப்புறம் அந்தப்பக்கம் போகவே கூடாது. தெரியுமில்ல. அப்படிப் போனா ஆளு போகமாட்டா. கை கால் விழுந்திடும்.”

“இல்ல சரோ நிச்சயமா இல்ல. இந்த வேல்ச்சாமி பழனி இவனுவதா என்னிக்கானும். சத்தியமா இனி மாட்டே சாமி கிட்ட சத்தியம் வுட்டிருக்கே... எல்லாம் ஃபுல் ஸ்டாப். தெரியுமில்ல. அப்படின்னா முற்றுப்புள்ளி. பொண்ணிருக்கு ஆணிருக்கு. அடுத்த வருசம் பவர் டில்லர் வாங்கணும்!” அவன் நாணிக் குறுகுகிறான்.

“அது சரி எங்களயெல்லாம் நீ வெரட்டிட்ருக்க. நீ எப்ப கல்யாணச் சீலை உடுத்தி, தலைப்பட்டம் கட்டி, மூக்குத்தி செயின் போட்டுகிட்டு மாப்புள கூட வரப்போற? ஏன் சரோ?”

“அதெல்லாங் கிடையாது. மூக்குத்தி, செயின் சரிகைச் சேலை எதும் கிடையாது. நீங்க லட்சுமிய கட்டிட்டபுலதா, சாமி முன் மால மாத்திட்டு போயி ரிஜிஸ்தார் ஆபீசில பதிவு பண்ணுவோம்.”

"விருந்து?”

“போட்டுட்டாப் போச்சி!”

“அப்ப... மாப்புள ஆரு சரோ? அறிவொளி இயக்கத்துல செவுப்பா ஒல்லியா அரும்பு மீசை வச்சிகிட்டு ஒருத்தர் இருந்தாரே... அவருதானா?”

சரோ இடி இடி எனச் சிரிக்கிறாள்.

“அவருக்குக் கலியாணம் கட்டி ஒரு புள்ள இருக்கு. இப்ப நீங்க அதும் இதும் வம்படிக்காம வூட்டுக்குப் போங்க.”

அறிவொளி இயக்கம் என்று ஆண்பிள்ளைகள் உள்ள குழுக்களில் அவள் தீவிரமாக ஈடுபட்டு அங்கே இங்கே கற்போம், கற்பிப்போம் என்று பாட்டுப் பாடிக் கொண்டு போவதைச் செவந்தியால் தடை செய்ய முடியவில்லை. குடியை ஒழிக்க இந்தச் சாமியாரிடம் பச்சிலை மருந்து